பெரம்பலூர் :தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் வீடு கட்டிக் கொடுக்கும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளதாக நல வாரியத்தின் தலைவர் பொன்குமார் பெரம்பலூரில் பேட்டியளித்தார்.
தமிழ்நாடு தொழிலாளர் நலம் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் தமிழ்நாடு கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியத்தின் சார்பில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு கரோனோ தடுப்பூசி செலுத்துதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
நலத்திட்ட உதவிகள் வழங்கல் இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கடபிரயா தலைமை வகித்தார். இதில் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் மற்றும் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தின் தலைவர் பொன்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு தொழிலாளர்களுக்கு குழந்தை தடுப்பூசி செலுத்தும் நிகழ்வினை தொடங்கிவைத்தனர்.
இதைத் தொடர்ந்து தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியம், மாவட்ட சமூக நல அலுவலகம் துறை மற்றும் மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல துறையின் மூலம் இலவச தையல் இயந்திரங்கள், விபத்து மரணம், திருமண உதவி, கல்வி, ஓய்வூதியம் மற்றும் இயற்கை மரணம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் 186 பயனாளிகளுக்கு சுமார் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டது. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இலவச வீடுகள்- பொன் குமார் தகவல் இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தின் தலைவர் பொன்குமார், நல வாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இலவசமாக வீடு கட்டிக் கொடுக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. தொழிலாளர் நலத்துறை அலுவலகங்களில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் கேட்டு மனு கொடுத்து, நிலுவையிலுள்ள தொழிலாளர்களின் அனைத்து மனுக்களும் விரைவாக பரிசீலிக்கப்பட்டு நலத்திட்டங்கள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும்.
தொழிற்சங்கங்கள் என்ற பெயரில் ஏழை தொழிலாளர்களின் பொய்யான பிரச்சாரங்களை செய்து அவர்களிடத்தில் நிதி வசூல் செய்யும் சங்கங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் சட்டப்பேரவை உறுப்பினர் பிரபாகரன் உள்பட துறை சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு நிர்வாகிகள் மற்றும் பயனாளிகள் எனத் திரளாக பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க : நாளுக்கு நாள் நலிவடையும் கட்டுமானத் தொழில் - காப்பாற்றுமா அரசு?