பெரம்பலூர்:கடந்த சில மாதங்களாகப் பட்டிகளில் அடைக்கப்பட்டு இருக்கும் ஆடுகள் தொடர்ச்சியாகக் காணாமல் போவதாகப் புகார் வருவதைத் தொடர்ந்து பெரம்பலூர் நகரக் குற்றப்பிரிவு போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று (ஜன.22) அதிகாலை பெரம்பலூர் அருகே உள்ள வெள்ளலூர் கிராமப் பகுதியில் ரோந்து சென்றுள்ளனர்.
இந்நிலையில், சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் டாட்டா மேஜிக் பயணிகள் வேன் ஒன்று வருவதைப் பார்த்த போலீசார், அவர்களைப் பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது அந்த வாகனத்தில் வேட்டையாடப்பட்ட 3 மான்களின் சடலங்கள் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும் அந்த வேனிலிருந்த 5 பேரையும் பிடித்து விசாரித்த போது, அவர்கள் திருச்சி மாவட்டம் எதுமலை வனப்பகுதியில், உரிமம் பெறாத நாட்டுத் துப்பாக்கியின் மூலம் மான்களை வேட்டையாடி பெரம்பலூர் பகுதிக்கு அவர்கள் எடுத்து வந்தது தெரியவந்தது.
மேலும் அவர்கள் பெரம்பலூர் மாவட்டம் ரெங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த வேட்டை மணி என்கிற மணிகண்டன் (24), ராமச்சந்திரன் (30) வெள்ளனூர் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (33), கார்த்திக் (19) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களைக் காவல் நிலையம் அழைத்து வந்த போலீசார், பெரம்பலூர் மாவட்ட வனத்துறை அதிகாரிகளிடம் 5 நபர்களையும் ஒப்படைத்தனர்.