தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 58 வயது நபர் ஒருவர் தனது உறவினர் ஒருவரின் இல்லத் திருமண நிகழ்வில் கலந்துகொள்வதற்காக, கடந்த மே 27ஆம் தேதி குடும்பத்தினருடன் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டத்திலுள்ள ஒரு கிராமத்திற்கு வந்துள்ளார்.
கரோனாவால் பெரம்பலூரில் முதல் உயிரிழப்பு! - கரோனா வைரஸ் செய்திகள்
பெரம்பலூர்: திருவள்ளூரிலிருந்து திருமண நிகழ்ச்சிக்கு பெரம்பலூர் வந்த நபர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
ஜூன் ஒன்றாம் தேதியன்று அவருக்குக் கடுமையான காய்ச்சல் இருந்த காரணத்தினால், அரியலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். தொடர்ந்து ஜூன் இரண்டாம் தேதி மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இதையடுத்து திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு, பரிசோதனை முடிவில் கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார். கரோனா வைரஸ் தொற்றால் பெரம்பலூரில் ஏற்பட்டுள்ள முதல் உயிரிழப்பு இதுவாகும்.