பெரம்பலூர் அருகே மருதையாற்று புதைமணலில் சிக்கிக்கொண்டு உயிருக்குப் போராடிய பசுமாடு, 2 மணிநேரப் போராட்டத்திற்குப் பின் மீட்கப்பட்டது. அவ்வாறு மீட்கப்பட்ட மாட்டுடன் அதன் உரிமையாளர் விஏஓ அலுவலகத்திற்குச் சென்று விஏஓவை முற்றுகையிட்டார். காரணம் புதைமணலில் சிக்கித் தவித்த பசுவை மீட்க உதவிகோரியும் அந்த விஏஓ முன்வராததே ஆகும். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
புதைமணலில் சிக்கிய பசு: ஆலத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட புஜங்கராயநல்லூர் கிராமத்தில் வசித்து வருபவர், விவசாயி தர்மராஜ். இவருக்குச்சொந்தமான கறவை மாடு கிராமத்திற்குள் உள்ள மருதையாற்றுப்படுகையில் இன்று (ஏப்.22) மேய்ச்சலுக்கு சென்றபோது, ஆற்றுப்படுகையில் தேங்கி இருந்த நீரை அருந்த சென்றுள்ளது. அப்போது, திடீரென புதைமணலில் சிக்கியுள்ளதாகத் தெரிகிறது.
புதைமணலில் சிக்கித் தவித்த பசுவை மீட்க உதவாத விஏஓ முற்றுகை உதவ மறுத்த விஏஓ:இதைக் கண்ட தர்மராஜ், உடனே கிராம நிர்வாக அலுவலரிடம் பசுமாட்டை காப்பாற்ற உதவி கேட்டுள்ளார். ஆனால், விஏஓ கிருஷ்ணசாமி உதவிக்கு வராத நிலையில் தர்மராஜ், கிராம மக்களின் துணையோடு, ஜே.சி.பி இயந்திரத்தைக் கொண்டு இரண்டு மணி நேரம் வரைப் போராடி, பசுவை உயிருடன் மீட்டுள்ளார். மேலும், உயிருக்குப்போராடிய பசுவைக் காப்பாற்ற உதவி செய்யாத கிராம நிர்வாக அலுவலரின் அலுவலகத்திற்குச் சேற்று உடம்புடன் சென்ற தர்மராஜ், விஏஓ கிருஷ்ணசாமியை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்துள்ளார்.
கிராம மக்கள் கோரிக்கை: அப்போது, விஏஓ மாட்டை காப்பாற்றுவது, தனது வேலை இல்லை என்று கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடந்த தர்மராஜ் இது குறித்து உயர் அலுவலர்களிடம் புகார் தெரிவித்துள்ளார். மருதையாற்றுப்படுகையில் மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள், பல அடி ஆழத்திற்கு குழிதோண்டி அதை மூடாமல் விட்டுவிடுவதால் பல இடங்களில் இவ்வாறு புதைமணல் உருவாகியுள்ளதாக கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். பசு சிக்கியதைப் போன்று மனித உயிர்கள் புதைமணவில் சிக்கும் முன் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளனர்.
இக்கட்டான சூழ்நிலைகளில் இதை செய்யுங்கள்: கிராமங்களில் இது போன்று சூழ்நிலைகளில் பொதுமக்கள் ஒன்றிணைந்து பசுவை மீட்டது பாராட்டத்தக்கது. அதே வேளையில், இது மாதிரியான இக்கட்டான ஒரு சூழ்நிலை வரும்போது, தாங்கள் எடுக்கும் முயற்சிகளோடு அவை குறித்து தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினருக்குத் தகவல் அளிக்க மறவாதீர்கள். அலட்சியம் காட்டும் அரசு அலுவலர்களுக்கு மத்தியில், எந்த ஒரு நேரத்திலும் அலட்சியம் என்பதை அறியாத அரசு சார்ந்த துறையாக தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை ஒன்றுள்ளதை நமக்கு ஏற்படும் இக்கட்டான நிலைமைகளில் நாம் மறந்து விடுகிறோம்.
இனி, இதுபோன்ற மீட்பு நடவடிக்கைகளுக்கு தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையை அழைத்து பாதிப்புகள் ஏற்படுவதற்கு முன்பே அவற்றைத் தவிர்க்க அவசரகால அழைப்பு எண் - 101 என்ற எண்ணிற்கு அழையுங்கள்.
இதையும் படிங்க: கால்வாயில் தவறி விழுந்த பசு - பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறை