பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் செட்டிகுளம் அருகில் உள்ள கண்ணப்பாடி கிராமத்தில் வீரபத்திரன் வகையறா என்ற குடும்பத்தினர் தங்களுடைய கூட்டு சொத்தான ஏழரை ஏக்கர் பரப்பளவு நிலத்தில் 3 ஏக்கரில் மிகப்பிரம்மாண்டமாக நூற்றாண்டுகளுக்கும் மேலான ஆலமரத்தினை பாதுகாத்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் சென்னையில் உள்ள அடையாறில் உள்ள ஆலமரம் சுமார் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. அதேபோல் பெரம்பலூர் மாவட்டத்திலும் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
கண்ணப்பாடி கிராமத்தைச் சேர்ந்த பள்ளக்காடு பகுதி வீரபத்திரன் என்பவர் நான்கு தலைமுறைக்கு முன்பாக தங்களுடைய சொந்த இடத்தில் ஆலமரம் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். தற்போது அவரது மகன்கள், பேரன்கள், கொள்ளுப் பேரன்கள் என்று தலைமுறை தலைமுறையாக அந்த ஆலமரத்தை பாதுகாத்து வருகின்றனர்.
ஆலமரத்திற்காக நிலத்தை பகிராமல் உள்ள குடும்பம் பழமையான ஆலமரம் பற்றி வீரக்குமார் கூறுகையில், “இந்த ஆலமரம் நூறு ஆண்டுகள் பழமையானது. ஐந்து தலைமுறைகளுக்கு மேலாக பாதுகாத்து வருகிறோம். அடிமரம் மற்றும் அதனிலிருந்து விழுந்த விழுதுகள் மூலம் தற்போது மிகப்பெரிய மரமாக இருக்கிறது.
எங்களுடைய மூதாதையர்கள் பாதுகாத்து வந்த இந்த ஆலமரத்தை எங்களுடைய குடும்ப சொத்தாகக் கருதுகிறோம். செட்டிகுளத்தில் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழாவின்போது இங்கு அன்னதானமும் நடைபெறும்.
100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம் இந்த மரத்தைப் போல எங்களது குடும்பமும் பெரிய குடும்பமாக வாழ்ந்து வருகிறோம். 7 ஏக்கர் பரப்பளவில் இந்த மரம் மட்டும் 3 ஏக்கர் உள்ளது. இந்த இடத்தை யாருக்கும் தனிப்பட்ட பங்கு பிரிக்காமல் எங்களுக்கு மூதாதையர்கள் போல ஒற்றுமையாக இருந்து இந்த ஆலமரத்தை பாதுகாத்து வருகின்றனர் என்றார்.
ஆலமரத்தைப் பற்றி குடும்பத்தின் மூத்தவர் சேவலிங்கம் கூறுகையில், “எங்களது குடும்பத்தில் எல்லோரும் ஒற்றுமையாய் இருந்து ஆலமரத்தைப் பராமரித்து வருகிறோம். எங்களுடைய பாரம்பரியத்தின் குலதெய்வமாகவும் குடும்ப சொத்தாகவும் ஆலமரம் உள்ளது” என்றார்.
100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம் மேலும் பிரதீப் கூறுகையில், “எங்களுடைய தாத்தா, அப்பா என்று தலைமுறை தலைமுறையாக பாதுகாத்து தற்போது நாங்கள் பாதுகாத்து வருகிறோம். தாய் மரத்திலிருந்து கிளைகள் பிரிந்து தற்போது 100-க்கும் மேற்பட்ட கிளைகளில் இருந்து ஆலமரம் நிற்கிறது.
வர்தா புயலில் இந்தத் தாய் ஆல மரத்தின் கிளைகள் ஒடிந்து விழுந்துவிட்டன. தற்போது அதில் இலைகள் முளைக்கத் தொடங்கியுள்ளது” என்றார்.
ஆனந்தன் என்பவர் கூறுகையில், “ஆலமரத்தின் நீர்மட்டம் தேவைக்காக அருகில் பண்ணை குட்டை அமைத்து பாதுகாத்து வருகிறோம். இந்த மரத்தை ஒரு பூங்காவனம் போல பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் இருந்த காலத்தில் ஒரு மரத்தின் கிளையில் இருந்து அனைத்து மரத்தின் கிளைகளிலும் சுற்றி சுற்றி வந்து விளையாடுவதும், எங்களுடைய குடும்பத்தின் பாரம்பரிய சொத்தான இதை நாங்கள் பாதுகாத்து வருவது மகிழ்ச்சியே.
ஆலமரத்தின் மையப்பகுதியில் குலதெய்வமாக வழிபாடு செய்துவருகிறோம். ஆலமரத்தின் 8 பக்கங்களும் கிளைப் பிரிந்து கிளைகளிலிருந்து விழுதுகள் தோன்றி வேர் ஊன்றி நிற்கின்றன. நடுவில் இச்சி மரம், புளிய மரமும் இணைந்து இதில் வளர்ந்து வருகிறது” என்றார்.
மரத்திற்காக நிலத்தை பகிராமல் உள்ள குடும்பம் குல தெய்வமாகக் கருதி பாதுகாத்து வரும் இந்த ஆலமரம் நிலத்தை பங்கிட்டால் காப்பாற்ற முடியாது, வழிபடவும் முடியாது என்பதை உணர்ந்து கொண்ட குடும்பத்தினர் தற்போது ஆலமரத்தைக் கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வருகின்றனர்.
இதையும் படிங்க:மோடியை அடுத்து ஸ்டாலினை விரட்டிய ட்விட்டர் ஹேஷ்டேக்!