பெரம்பலூரில் அரசு வழங்கி வரும் முதியோர் உதவித் தொகையை மட்டுமே நம்பி, வயதான தம்பதியினர் வாழ்க்கை நடத்தி வந்தனர். இதையடுத்து அவர்களுக்கு வழங்கி வந்த முதியோர் உதவித்தொகையான ஆயிரம் ரூபாயை தற்போது அரசு நிறுத்தியதால், அடுத்த வேளை உணவுக்கே வழியின்றி, அவதிப்படும் அவலநிலைக்கு அந்த வயதான தம்பதியினர் தள்ளப்பட்டுள்ளனர்.
பெரம்பலூர் நகர், எளம்பலூர் சாலையில் மேட்டுத்தெருவில் வசித்து வருபவர் வெங்கட்ராமன். 83 வயதான இவர், தனது மனைவி ஜலகத்துடன் வாடகை வீடு ஒன்றில் வசித்து வருகிறார். இவர்களுக்குப் பிள்ளைகள் கிடையாது. இதையடுத்து தம்பதியினர் இருவருக்கும் தலா ஆயிரம் ரூபாய் என அரசு முதியோர் உதவித் தொகையாக வழங்கி வந்தது.
மேலும், அப்பகுதி வழக்கறிஞரிடம் உதவியாளராக நாள்தோறும் ரூ. 100 சம்பளமாக பெற்றுக்கொண்டு வெங்கட்ராமன் பணியாற்றி வந்தார். அரசு உதவித் தொகையுடன், நாள்தோறும் பெறும் பணத்தை வைத்துதான் இவர்கள் இருவரும், தங்களது அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்து, வாழ்க்கையை நடத்தி வந்தனர்.