பெரம்பலூரின் நான்கு ரோடு பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநிலப் பொறுப்பாளர் இரா. கிட்டுவின் இல்லத்தில் தொல்காப்பிய நூலகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கலந்துகொண்டு திறந்துவைத்துப் பார்வையிட்டார்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் அவர் செய்தியாளரிடம் பேசுகையில், “திமுக அரசின் அறிவிப்பும், செயல்திட்டங்களும் சமூக நீதிக்கான அரசு என்பதை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. வருகின்ற 17ஆம் தேதியான பெரியார் பிறந்த நாளில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சமூக நீதி உறுதிமொழி ஏற்கப்படும்.
நீட் விவகாரத்தில் நல்ல தீர்வு?
வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்த நாளில், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும்.
அதேபோல் எந்த விசாரணையும் இல்லாமல் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும். கூட்டாட்சித் தத்துவத்தைக் கூறிய அண்ணா பிறந்த நாளை மாநில சுயாட்சி நாளாக, மாநில உரிமை நாளாக அறிவிக்க வேண்டும்.
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான ஆணையம் உருவாக்கப்படும் என்ற அறிவிப்புக்கு நன்றி! அனைவரின் கோரிக்கையும் நீட் தேர்வு வேண்டாம் என்பதே. திமுக அரசும் அதே நிலைப்பாட்டில்தான் உள்ளது. நீட் விவகாரத்தில் நல்ல தீர்வு கிடைக்கும் என நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்” என்றார்.
இதையும் படிங்க:புதிய ஆளுநரை வரவேற்று மு.க. ஸ்டாலின் ட்வீட்