உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்று கடந்த 20 நாள்களாக இந்தியாவில் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் அதன் தாக்கம் அதிகரித்து இரண்டாம் நிலையை அடைந்துள்ளது. கோவிட்-19 பெருந்தொற்று நோய் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு மத்திய அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு காரணமாக வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், ஏழை எளிய மக்கள், இடம்பெயர்ந்த கூலித்தொழிலாளர்கள், விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. ஊரடங்கு உத்தரவின் காரணமாக தாங்கள் பயிரிட்ட, சாகுபடி செய்த பொருள்களை விற்பனை செய்ய முடியாத நிலையில் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
குறிப்பாக, விவசாயத்தை முதன்மை தொழிலாகக் கொண்டிருக்கும் பெரம்பலூர் மாவட்டத்தின் அடைக்கம்பட்டி, நக்கசேலம், அம்மாபாளையம், செட்டிக்குளம், சதிரமனை, குரும்பலூர், நொச்சியம், ஆலத்தூர் உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கடலை சாகுபடியை வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர்.