பெரம்பலூர் மாவட்டம், குன்னம் பகுதியில் உள்ள வெங்கட்டான் ஏரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குடிமரமாத்துப் பணிகளுக்காக ஏரியை தூர்வாரிய போது ஐம்பதிற்கும் மேற்பட்ட மிகப்பெரிய உருண்டை வடிவிலான பொருள்கள் கணடெடுக்கப்பட்டன. இவை டைனோசர் முட்டைகள் என சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதைத்தொடர்ந்து, அதனை ஏராளமான மக்கள் பார்வையிட்டுச் செல்கின்றனர்.
இந்நிலையில், இது குறித்து புவியியல் ஆய்வாளர் நிர்மல் ராஜாவிடம் பேசுகையில், "குன்னம் பகுதியில் கிடைத்த பொருள்கள் டைனோசர் முட்டைகள் இல்லை. டைனோசர் முட்டையின் ஓட்டுப் பகுதியில் ஆராய்ச்சி செய்து அதன் உருவ அமைப்பை ஆராய்ந்த பின்னரே அது டைனோசர் முட்டை என உறுதிப்படுத்த முடியும்.
கடந்த 15ஆண்டுகளுக்கு முன்பு அரியலூர் மாவட்டம், கள்ளங்குறிச்சி பகுதியில் அரசு சிமெண்ட் சுரங்கத்தில் ஒரு டைனோசர் முட்டை கண்டெடுக்கப்பட்டது. ஆனால், குன்னத்தில் கண்டறியப்பட்டது டைனோசர் முட்டைகள் அல்ல.