பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவியின் உத்தரவின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு சாராயத்தை தயாரிப்பது மற்றும் விற்பனை செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு உதவி ஆய்வாளர் செந்தமிழ்ச் செல்வி மற்றும் அவரது குழுவினர்கள், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நாட்டுச் சாராயம் விற்பனை, தயாரித்தல் மற்றும் ஊறல் போடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை தேடி சிறப்பு தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று (மே 16) மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில், வைத்தியநாதபுரத்தைச் சேர்ந்த தனம் என்ற தனலெட்சுமி என்பவர் 4.300 லிட்டர் மற்றும் பெரம்பலூர் மாவட்டம் காரியனூரைச் சேர்ந்த பவுனாம்பாள் என்பவர் 7 லிட்டர் நாட்டு சாராயத்தை விற்பனைக்காக பாக்கெட்டுகளில் வைத்திருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அவர்களிடம் இருந்து கைப்பற்றிய சாராய பாக்கெட்டுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவியின் உத்தரவின்படி, அதே இடத்தில் காவல் துறையினர் அழித்தனர். அது மட்டுமல்லாமல், அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு சாராயத்தை விற்பனை செய்ததற்காக தனலெட்சுமி மற்றும் பவுனாம்பாள் ஆகிய இருவரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.