புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் 17-நாட்களை தாண்டி நடத்தி வரும் போராட்டம் மேலும் வலுத்து வரும் நிலையில், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகளும், அனைத்து விவசாய சங்கங்களும் வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு: தமிழ்நாடு விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் - புதிய வேளாண் சட்டம்
டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக, திருவாரூர் பழைய ரயில் நிலையம் முன்பு அனைத்து கட்சியினர் சார்பில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த கூடாது என்றும் உடனே திரும்பப் பெற வலியுறுத்தியும் டெல்லியில் போராடும் விவசாயிகளை அழைத்து சுமுகமான பேச்சு வார்த்தை நடத்தி வாக்குறுதிகளை நிறைவேற்றி கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல், திருநெல்வேலியில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும் டெல்லியில் நடைபெறும் விவசாய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.