விவசாயத்தை முதன்மையாகக் கொண்ட பெரம்பலூர் மாவட்டத்தில் பருத்தி, மக்காச்சோளம், சின்னவெங்காயம், சிறுதானிய வகைகள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இங்கு 2018-19ஆம் ஆண்டுகளில் 64 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டது.
இந்த பயிர்களை படைப்புழு தாக்கியதைத் தொடர்ந்து வெண்புள்ளியும் தாக்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். இதைத் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்திய பிறகு சேதமடைந்த பயிர்களுக்கு தமிழ்நாடு அரசு நிவாரணம் வழங்கியது.
இதனிடையே படைப்புழு மீண்டும் தாக்கினால் பயிர் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில், பெரும்பாலான விவசாயிகள் மக்காச்சோள பயிர்களை சாகுபடி செய்யாமல் இருந்தனர். இந்நிலையில், 2019-20ஆம் ஆண்டுக்கு 57 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டது.
ஆனால், எதிர்பாராத விதமாக மீண்டும் வெண்புழு தாக்கி மக்காச்சோள பயிர்கள் வேரில் இருந்து அழித்து வருவது விவசாயிகளை வேதனையடையச் செய்துள்ளது. இதனிடையே, வெண்புழுவால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிர்களை வேளாண் துறை அலுவலர்கள் இன்று ஆய்வு நடத்தினர்.
வெண்புழு பாதிப்பில் இருந்து பயிர்களை ஆரம்ப கட்டத்திலேயே பாதுகாக்க மாவட்ட நிர்வாகம், வேளாண் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.