தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மயில், குரங்குகளுக்கு இரையாகும் பப்பாளிகள்... ஊரடங்கால் உருக்குலைந்த விவசாயிகள்! - agriculture news in tamil

செழித்து வளர்ந்த பப்பாளி மரங்களும், அதன் கனிகளும், விவசாயிகளின் எதிர்பார்ப்பை அதிகரித்தன. ஆனால், ஊரடங்கால் அவர்களின் எதிர்பார்ப்பு தவிடுபொடியாகியது.

மயில், குரங்குகளுக்கு இரையாகும் பப்பாளிகள்... ஊரடங்கால் தவிக்கும் விவசாயிகள்!
மயில், குரங்குகளுக்கு இரையாகும் பப்பாளிகள்... ஊரடங்கால் தவிக்கும் விவசாயிகள்!

By

Published : May 7, 2020, 4:28 PM IST

தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்கள் விவசாயத்தையே பிரதான தொழிலாகக் கொண்டுள்ளன. அறுவடைக் காலம் தான், விவசாயிகளின் வாழ்வாதாரம். பயிரை விதைத்து, சாகுபடி செய்யும் வரை அவர்கள் கால்கள் ஓயாது. இத்தனை அரும்பாடு பட்ட, விவசாயிகளுக்கு ஊரடங்கு பேரிடியாக வந்தது.

மாதக்கணக்கில் உழைப்பை உரமாக்கி, விளைவித்த காய்கறிகளை வாங்க ஆளில்லாததால், மனமுடைந்த விவசாயிகள் பயிரிட்ட இடத்திலேயே அவற்றை அழிப்பதும், குப்பையில் கொட்டுவதுமான துயர் மிகுந்த செய்திகளை படித்துக் கொண்டுதான் இருக்கிறோம். பெரம்பலூர் மாவட்டத்திலும், இந்தச் சம்பவம் நடைபெறாமல் இல்லை. பப்பாளி சாகுபடி செய்யக் காத்திருந்த, விவசாயி சுருளிவேல் தன் கைகளால் அதனை உதிர்த்து விடுகிறார்.

உதிர்க்கப்பட்ட பப்பாளிகள்

பெரம்பலூர் மாவட்டம், கோரிபாளையம் கிராமத்திலும் சிறுவாச்சூர், மலையப்ப நகர் பகுதியிலும் பப்பாளி சாகுபடி அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த பப்பாளி கன்றுகள், பத்து மாதம் வரை பராமரிக்கப்படுகின்றன. செழித்து வளர்ந்த பப்பாளி மரங்கள், விவசாயிகளின் எதிர்பார்ப்பை அதிகரித்தன. ஆனால், ஊரடங்கால் அவர்களின் எதிர்பார்ப்பு தவிடுபொடியாகியது. தற்போது, பப்பாளி சீசனாக இருந்தாலும் கூட அதனை வாங்குவோர் யாருமில்லை.

இது குறித்து விவசாயி சுருளிவேல், “ரம்ஜான் பண்டிகையில் அதிகளவில் ஏற்றுமதியாகக் கூடிய பப்பாளிகள், ஊரடங்கால் தடைப்பட்டது. பழங்கள் மரத்தில் பழுத்து காணப்படுகின்றன. பறிப்புக்கு கூலி ஆள்களும் கிடைப்பதில்லை. நல்ல மகசூலில் 5 டன் வரை ஏற்றுமதி செய்வேன். ஆனால், தற்போது 1 டன் ஏற்றுமதிக்கே போதிய விலை கிடைப்பதில்லை.

மரத்தில் பழுத்த பப்பாளிகள்

பொதுமக்கள் வெளியில் வராத காரணத்தினால், வியாபாரிகள் பழங்களை வாங்க தயங்குகின்றனர். 5 லட்சத்திற்கு மேல் செலவு செய்து பப்பாளி மரங்களைப் பேணி வளர்த்தேன். தற்போது, கண்ணெதிரே அவை வீணாகி வருவதைப் பார்க்க வேதனையாக இருக்கிறது. மரத்திலிருந்து கீழே உதிர்த்துவிடும் பழங்களை மயிலும், குரங்குகளும் உண்ணுகின்றன. ஒரு பழம் பழுத்து, அழுகி வீணாகும்போது பறிக்காமல் விட்டால், மற்றவையும் வீணாகும்” என்றார்.

ஊரடங்கினால் வீணாகும் பப்பாளிகள்!

“சுருளிவேலின் நிலைமை புரிந்து கொண்டு உதவலாம் என்று நினைத்தேன். ஆனால், அரசு கொடுக்கும் குறைந்தபட்ச நேரத்தில் உரிய பாதுகாப்போடு நெடுந்தூரம் செல்ல முடியாது. கேரளா, திருச்சி, மதுரை போன்ற இடங்களுக்கு, பொறுமையாகக் கொண்டு செல்லுவதற்கு முன், பழங்கள் வீணாகிவிடும். அரசு அவருக்கு உதவுவதுதான், சரியாக இருக்கும்” என்கிறார், விவசாயி குமார்.

இதையும் படிங்க: கரோனா காலத்திலும் கலைக்கு ஓய்வில்லை... 2 ஆயிரம் ஓவியங்கள் தீட்டிய நெல்லை மாணவர்கள்!

ABOUT THE AUTHOR

...view details