பெரம்பலூர்:பாடாலூர் கிராமத்தில் ஊராட்சி அலுவலகத்திற்குப் பின்பகுதியில் ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்காக ஸ்ரீமுத்துமாரியம்மன் என்ற சிறிய கோயில் உள்ளது. இந்த கோயில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நிலையில் ஆண்டுதோறும் அந்த சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் சுவாமி வழிபாடு செய்வதும், முயல் வேட்டை திருவிழா நடத்துவதும் தொடர்ந்து வந்தது.
இந்நிலையில், இந்த ஆண்டு முதன்முறையாக சுவாமி வீதிஉலாவிற்கும் பால்குடம் எடுப்பதற்கும் ஏற்பாடு செய்திருந்தனர். இதற்கு 10க்கும் மேற்பட்ட மாற்று சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்புத்தெரிவித்து வந்தனர். இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டு நீதிமன்றம் காவல் துறையினர் இரு சமுதாயத்தினருக்கும் பிரச்னை இல்லாமல், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் சுவாமி ஊர்வலம் நடத்தலாம் என்று உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில் இன்று (ஜூன் 19) சுவாமி ஊர்வலம் மற்றும் பால்குடம் எடுப்பதற்கு கோயில் தரப்பு சமுதாயத்தினர் ஏற்பாடு செய்திருந்த நிலையில் மாற்று தரப்பு சமுதாயத்தைச் சேர்ந்த பொதுமக்கள், ‘எங்கள் வீதி வழியாக சுவாமி ஊர்வலம் பால்குடம் உள்ளிட்டவை நடைபெறுவதற்கு அனுமதிக்க மாட்டோம்’ என்று கூறி 500க்கும் மேற்பட்டவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.