பெரம்பலூர் : பெரம்பலூர்-மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் அருகே உள்ள பேரளி கிராமத்தில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு பெரம்பலூர்-மானாமதுரை மாநில நெடுஞ்சாலை தேசிய நெடுஞ்சாலையாக அப்போதைய ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து சாலைகள் இருபுறமும் அகலப்படுத்தி புதிய சாலை அமைக்கப்பட்டது.
இந்த சாலையில் பயணிக்கும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்கும் விதமாக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பேரளி கிராம பகுதியில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டது. இந்த சுங்கச்சாவடிக்கு சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளும் பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்ததால் கட்டணம் வசூலிக்கப்படாமல் இருந்தது. மேலும் இந்த சாலையும் பராமரிப்பின்றி தற்போது பழுதடைந்து கிராம சாலை போல வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது.
சுங்கச்சாவடி முற்றுகை
இந்நிலையில் திடீரென எந்தவித முன்னறிவிப்புமின்றி நேற்று காலையில் இருந்து இந்த சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது. சுங்கச்சாவடிகளில் எந்த விதமான அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையில் அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்பட்டதற்கு வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து,அதிக அளவில் கட்டணம் வசூலிப்பதை கண்டித்து பேரளி, சித்தளி கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வாகன ஓட்டிகளுடன் சேர்ந்து இன்று(ஜூலை.25) காலை திடீரென சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.