பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 11 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இவர்களில், நான்கு பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், கரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்டுள்ள சில்லக்குடி, வீரம நல்லூர் பகுதிகள் சுகாதாரத் துறையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
ஊர் முழுவதும் கிருமி நாசினி தெளித்து, அங்குள்ள நபர்கள் வெளியே செல்லாதவாறும், வெளி நபர்கள் உள்ளே வராத அளவிற்கும் தடுப்புவேலி அமைக்கப்பட்டுள்ளது. கரோனா நோய் தொற்று பாதித்த ஒருவர் பணிபுரிந்த துங்கபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்டுள்ளது.
மேலும், நோய்த் தொற்று பாதித்த அத்தியூரைச் சேர்ந்தவரின் மகள் பணிபுரிந்த பெரம்பலூர், கிருஷ்ணாபுரம் எஸ்.பி.ஐ. வங்கிகள் மூடப்பட்டு அங்கு பணிபுரிந்த 43 பணியாளர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.