பெரம்பலூர் மாவட்டத்தில் நவம்பர் 18ஆம் தேதி 2000 ரூபாய் நோட்டுகளை 500 ரூபாய் நோட்டுகளாக மாற்றித் தருவதாகக் கூறி மதுரையைச் சேர்ந்த ஆறு பேரிடம் 78 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை பறித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான எசனை கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ், அவனது கூட்டாளி கருணாநிதி ஆகியோரை பெரம்பலூர் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
பணத்தைப் பறிகொடுத்தவர்களில் ஒருவர் மதுரையைச் சேர்ந்த சவுந்தரபாண்டியன். இவர் அளித்த புகாரின் பேரில் பெரம்பலூர் காவல் நிலையத்தில் முதல்கட்டமாக ஒன்பது பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து நவம்பர் 24ஆம் தேதி துரைமங்கலம் ரமேஷ், நூத்தப்பூர் கண்ணன், அனுகூர் செந்தில், சுரேஷின் மாமியார் வசந்தா, சுரேஷின் மனைவி சங்கீதா ஆகிய ஐந்து பேரை கைது செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.