பெரம்பலூர்:பிரதமர் மோடியின் நண்பர்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட ரூ.10.72 லட்சம் கோடி கடனை வசூல் செய்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தர வேண்டும் எனவும், டாஸ்மாக், மது உட்பட அனைத்து போதை பொருட்களையும் தடை செய்ய வேண்டும் என்றும்; பரப்புரை இயக்கம் என்ற தலைப்பில் மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக ஆண்டுக்கு ரூ.2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தருவதாக வாக்குறுதி அளித்ததை, ஆட்சிக்கு வந்த பின் நிறைவேற்றாமல் மாறாக சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது.
மேலும் சிறு தொழில் செய்யும் சாமானிய மக்கள் வாங்கும் கடனுக்கு, வட்டிக்கு மேல் வட்டி வசூலிக்கும் வங்கிகள், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வாராக்கடன் என்று பல்லாயிரம் கோடி தள்ளுபடி செய்துள்ளது என்பன உள்ளிட்ட மோடியின் திட்டத்தை எதிர்த்து குறிப்பிடப்பட்டிருந்த துண்டு பிரசுரங்களை மதுரை K.புதூர், காந்திகிராமம், பாண்டியன் நகர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் நந்தினி, நிரஞ்சனா ஆகிய இரண்டு பேரும் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் மற்றும் புதிய பேருந்து நிலையம் ஆகியப் பகுதிகளில் உள்ள வணிக நிறுவனம், சிறு கடைகள், பேருந்து பயணிகள், பொதுமக்கள் ஆகியோரிடம் விநியோகம் செய்து வந்துள்ளனர்.
அப்போது இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் மாவட்ட பாஜகவினர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் துண்டு பிரசுரம் விநியோகம் செய்த நந்தினி மற்றும் நிரஞ்சனா ஆகியோரிடம் இருந்த துண்டு பிரசுரங்களை வாங்கி கிழித்தெறிந்து உள்ளதாகத் தெரிய வருகிறது.