பெரம்பலூர் நகராட்சி சார்பில் புறநகர் பேருந்து நிலையம், அரசு தலைமை மருத்துவமனை வளாகம் ஆகிய இரண்டு இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்படுகின்றன. இந்த உணவகங்களில் உணவு தயாரிக்க மாதந்தோறும் சராசரியாக 50க்கும் மேற்பட்ட எரிவாயு உருளைகள் தேவைப்படுகின்றன.
அதையடுத்து நகராட்சிக்கு அதிகமான செலவு ஏற்படும் சூழ்நிலையில் இதை எதிர்கொள்ளும் வகையில் மனிதக் கழிவுகளில் இருந்து உயிரி எரிவாயு பயோ கேஸ் தயாரிக்கும் திட்டம் முடிவு செய்யப்பட்டது. அந்தத் திட்டமானது பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையம், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகம் ஆகிய இரண்டிற்கும் அருகில் உள்ள அம்மா உணவகத்தில் செயல்படுத்த நகராட்சி நிர்வாகத்தால் முடிவெடுக்கப்பட்டது.
உயிரி எரிவாயு பயோ கேஸ் திட்டத்தை நிறைவேற்றவும்! அதன்படி இத்திட்டத்திற்காக ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு உயிரி எரிவாயு தயாரிப்பதற்கான திட்டம் கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதனிடையே இத்திட்டத்திற்காக இரண்டு இடங்களில் உள்ள அம்மா உணவகங்கள் அருகே குழி தோண்டப்பட்டு உயிரி செரிமானக் கொள்கலன்களும் அமைக்கப்பட்டன. இந்த கொள்கலன்கள் பொதுக்கழிப்பறையுடன் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், உயிரி எரிவாயு தயாரிப்புத் திட்டப் பணிகள் கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டு 19 மாதங்கள் கடந்துள்ள நிலையில் இதுவரை பணிகள் முழுமை பெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் தொடங்கப்பட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில், இந்த உயிரி எரிவாயு தயாரிக்கும் திட்ட பணிகளில் அனுமதியின்றி வாகனம் நிறுத்தப்பட்டு சேதம் அடையும் தருவாயில் உள்ளது. எனவே உடனடியாக இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.