தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெரம்பலூரில் 300 ஆண்டுகள் பழமையான நாயக்கர் கால தூம்பு கல்வெட்டு கண்டெடுப்பு

பெரம்பலூர் வெள்ளந் தங்கி அம்மன் ஏரியில் கிழக்கு கரையில் தெலுங்கு மொழியில் அமைந்த 300 ஆண்டுகளுக்கு முந்தைய நாயக்கர் கால தூம்பு கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.

பெரம்பலூரில் ஏரியில் கண்டறியப்பட்ட நாயக்கர் கால தூம்பு கல்வெட்டு
பெரம்பலூரில் ஏரியில் கண்டறியப்பட்ட நாயக்கர் கால தூம்பு கல்வெட்டு

By

Published : Jul 9, 2022, 4:11 PM IST

பெரம்பலூர்: சூழலியல் செயல்பாட்டாளர் ரமேஷ் கருப்பையா, வரலாற்று ஆய்வாளர் முனைவர் செல்வபாண்டியன் ஆகியோர் வெள்ளந்தாங்கி அம்மன் ஏரிப் பகுதியில் மேற்பரப்பில் கள ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது இரட்டை தூணுடன் கூடிய தூம்பு கல்வெட்டு இருப்பதைக் கண்டறிந்தனர். அதனை படி எடுத்து தொல்லியல் அறிஞர் இராஜகோபால், மற்றும் மைசூரில் உள்ள முனைவர் முனிரத்னம் ஆகியோரிடம் அனுப்பி வைத்தனர். அவர்கள் ஆய்வு செய்ததின் அடிப்படையில் கி.பி 17ம் நூற்றாண்டை சார்ந்த நாயக்கர் கால கல்வெட்டு என கண்டறியப்பட்டுள்ளது.

சூழலியல் செயல்பாட்டாளர் ரமேஷ் கருப்பையா, வரலாற்று ஆய்வாளர் முனைவர் செல்வபாண்டியன்

இது குறித்து ரமேஷ் கருப்பையா மற்றும் செல்வபாண்டியன் கூறியதாவது,

சங்க காலம் முதலே அரசர்களும், நிர்வாகப் பொறுப்பில் இருந்தவர்களும் நீர் நிலைகளை உருவாக்கி அதனை பாசனத்திற்கும் பிற தேவைகளுக்கும் முறைப்படுத்த தூம்புகளை அமைத்துள்ளனர். இதற்கான சான்றுகளை சங்க இலக்கியங்கள் பல்லவர், சோழர், பாண்டியர், முதல் நாயக்கர் காலம் வரையிலான கல்வெட்டுகள் வழி அறியலாம்.

பொதுவாக ஏரிக்கரையில் இருந்து சற்றுத் தொலைவில் ஏரியின் உட்பகுதியில் குமிழித் தூம்புகள் அமைக்கப்படும். ஏரியின் தரைமட்டத்தில் கருங்கற்கலான தொட்டி கட்டப்பட்டு அதன் துளையின் மூலம் சுரங்ககால்வாய் வழியாக நீர் சென்று வெளியே இருக்கும் பாசனக் கால்வாயை அடையும் விதத்தில் அமைக்கப்பட்டிருக்கும்.

பாசனத் தேவைக்கேற்ப வெளியே செல்லும் நீரில் அளவை கூட்டவும், குறைக்கவும் தூம்புக்கல் உதவும். இதனை மேலும் கீழும் இயக்குவதற்கு கற்சட்டம் அமைக்கப்பட்டிருக்கும். ஆங்கிலேயர் காலத்தில் பொதுப்பணித் துறை நீர் நிலைகளை பராமரிக்கத் தொடங்கியதால் தூம்புகள் கைவிடப்பட்டன.

கல் வெட்டு செய்தி:

மதகுப் பகுதியில் சுமார் 20 அடி தொலைவில் 10 அடி உயரத்தில் இரண்டு தூண்களும் அவற்றுக்கு இடையில் குறுக்கு விட்டங்களும் காணப்படுகின்றன. வடபுறம் உள்ள தூணின் வெளிப்புறத்தில் ஏழு வரிகளில் அமைந்த தெலுங்கு கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளன.

" வியயசம்வஸ்தரம் வையாசி நெல 29 தி தமன்யம் வெங்க்கடசய்யா செய்ன்சிந தூம்புசுப மஸ்து"

இதன் பொருள் "விய ய ஆண்டு வைகாசி மாதம் 29ம் தேதி தமன்யம் வெங்கடசய்யா செய்து வைத்த தூம்பு" என்பதாகும். இதன் காலம் 17ம் நூற்றாண்டு ஆகலாம்.

பெரம்பலூர் மாவட்டத்தில் சாத்தனூரில் 12ம் நூற்றாண்டு அளவில் அரங்கன் அனியன் சாத்தனூருடையான், கொளக்காநத்தம் 13ம் நூற்றாண்டு அளவில் ஊற்றத்தூரைச் சேர்ந்த சுருதி மான் ஜனநாதன் அரைய தேவன் ஆன வானவி ச சாதி ர நாடாழ்வான், அம்மாபாளையத்தில் 13ம் நூற்றாண்டில் நவாறப்ப நங்கிழான் நாயன் சேதியன் ஆகிய பெருமக்கள் தூம்புகளை செய்து வைத்ததை அங்குள்ள கல்வெட்டுகள் வழி அறிய வருகின்றோம்.

இவற்றின் வழியாக பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே பெரம்பலூர் மாவட்டதில் நீர் மேலாண்மை மிகச் சிறப்பாய் பேணப்பட்டு வந்ததை அறிய முடிகிறது. தமிழக அரசு இந்த தூம்பினை வரலாற்று சின்னமாக அறிவித்து பாதுகாக்க வேண்டும் என தெரிவித்தனர்.

இதையும் படிங்க:ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி - வழிகாட்டி நெறிமுறைகள் அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details