பெரம்பலூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் மாவட்டச்செயலாளர் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கூட்டத்திற்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், 'மாநில அரசாங்கத்திற்கு எதிராக ஆளுநர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இதற்கு பல தரப்பிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மேலும் ஆளுநரை திரும்பப்பெற வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது.
அதேபோல மத்திய அரசு சார்பில் மின்சார திருத்தச் சட்டத்தினை வருகின்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்து அதனை நிறைவேற்ற மத்திய அரசு ஏற்பாடு செய்து வருகிறது. மத்திய அரசு மின்சார திருத்த சட்டம் அமலுக்கு வந்தால், மின்வாரியம் தனியார் மயமாக்கப்பட்டுவிடும், ஏழை எளிய மக்கள், சிறு தொழில் நடத்துபவர்கள் மற்றும் விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள். எனவே, இந்தச் சட்டம் அமலுக்கு வரும் நாளன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மிகப் பெரிய அளவிலான போராட்டத்தையும் முன்னெடுப்போம்’ என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ’பாஜகவுடன் ஆளுநர் கைகோர்த்துக்கொண்டு தமிழ்நாட்டில் ஒரு பதற்றமான சூழ்நிலையை உருவாக்கி வருகிறார். இதனையும் தடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் மிகவும் சிறப்பாக உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையில் ரூ.500 உயர்த்தி கொடுத்து இருப்பது வரவேற்கத்தக்கது. பெரம்பலூர் மாவட்டத்தில் சிப்காட் தொழில் பேட்டை துவங்கப்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது’ என்றார்.
தொடர்ந்து பேசிய பாலகிருஷ்ணன், ’பெரம்பலூர் மாவட்டம் மலையாளப்பட்டி பகுதியில் சின்னமுட்லு அணை கட்டும் திட்டத்தினை விரைந்து முடித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்கப்படுமானால் ஏராளமான விளை நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு நிலத்தடி நீர்மட்டமும் உயரும்.
தமிழ்நாட்டில் இந்தி மொழி திணிப்பினை மத்திய அரசு தொடர்ந்து செய்து வருகிறது. காசியில் தமிழ் மொழியை பற்றி உயர்வாகப்பேசியுள்ள மத்திய அமைச்சர்கள், பிரதமர் ஆகியோர் தமிழ்நாட்டில் இந்தி திணிப்பிற்கு ஏற்பாடு செய்து வருவதை கண்டிக்கிறோம்.