காவிரியில் சோழ மாமன்னன் கரிகாலன் கட்டிய கல்லணை இன்றளவும் நிலைத்து நின்று தஞ்சை, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களை டெல்டா பகுதிகளாக விளங்க காரண கர்த்தாவாக உள்ளார். அரியலூர் மாவட்டத்தில் கண்டிராதீர்த்தம் ஏரி, கரைவெட்டி ஏரி, சுக்கிரனேரி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் பாசன பரப்பு உள்ள பெரிய ஏரிகளையும், சுத்தமல்லி நீர்த்தேக்கம், பொன்னேரி உள்ளிட்ட பல பாசன ஏரிகள் மூலம் பல லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன.
நாளடைவில் ஏரிகள் ஆக்கிரமிப்பு காரணமாகவும், வரத்து வாய்க்கால்கள் தூர்வாரப்படாத காரணத்தினாலும் விவசாய பகுதி குறைந்து போனது. எனவே இதனை மீட்டெடுத்து சோழர்கால ஏரிகள் மற்றும் வரத்து வாய்க்கால்களை தூர்வாரி விவசாயத்தை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (அக்.29) கீழப்பழூரில் பிரச்சார நடைபயணத்தை தொடங்கியுள்ளார்.
கீழப்பழூர் பேருந்து நிலையத்தில் இருந்து தனது பிரச்சார எழுச்சி நடை பயணத்தை தொடங்கியுள்ள அன்புமணி ராமதாஸ் இன்று கீழப்பழூர், கண்டிராதித்தம், திருமானூர், ஏலாக்குறிச்சி தூத்தூர்,குருவாடி, கோவிந்தபுத்தூர் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக நடை பயணம் சென்று தா.பழூரில் இன்றைய நடைபயண பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார்.