பெரம்பலூர்: சுமார் 12 கோடி ஆண்டுகளுக்கு முன்பே அழிந்துபோன கடல்வாழ் உயிரினமான அமோனைட்ஸ்களின் எச்சங்கள் பெரம்பலூரில் அதிகளவில் கண்டறியப்பட்டுள்ளன. எனவே, இந்த அமோனைட்ஸ்கள் குறித்து அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாக ‘அமோனைட்ஸ் மையம்’ என்ற ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது.
பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள நூற்றாண்டு கட்டடத்தில் அமைக்கப்பட்டு வரும் அமோனைட்ஸ் மையத்தினை இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீவெங்கடபிரியா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்ரீவெங்கடபிரியா, “சுமார் 12 கோடி ஆண்டுகளுக்கு முன்பே அழிந்துபோன கடல்வாழ் உயிரினமான அமோனைட்ஸ் எனப்படும் நத்தை போன்ற தோற்றமுடைய உயிரினங்களின் படிவங்கள், நமது பெரம்பலூர் மாவட்டத்தில் அதிக அளவில் கிடைக்கிறது.
பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அமோனைட்ஸ் படிமங்களை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தும் வகையில், அதற்காக பிரத்யேக மையமும் அமைக்கப்பட்டு வருகிறது. தலைக்காலி என்னும் வகையினைச் சேர்ந்த அமோனைட்ஸ்கள், பலகோடி ஆண்டுகளுக்கு முன்பே அழிந்துவிட்டன. இந்த கடல்சார் உயிரினங்களின் படிமங்கள், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள காரை, கொளக்காநத்தம், பிலிமிசை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கிடைக்கின்றது.