பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களாக அடுத்தடுத்து கொலை, திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து முற்போக்கு இயக்கங்களின் சார்பாகவும், பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பாகவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஏராளமானோர் மனு அளித்தனர்.
ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு முற்போக்கு இயக்கங்கள் மனு!
பெரம்பலூர் : கொலை, கொள்ளை சம்பவங்களை கட்டுப்படுத்தி மறு வாழ்விற்கான வழிகளை ஏற்படுத்த வேண்டும் எனக்கோரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு முற்போக்கு இயக்கங்களின் சார்பாக மனு அளிக்கப்பட்டது.
அதில், "பெரம்பலூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொலை, கொள்ளை சம்பவங்களை கட்டுப்படுத்தி மறுவாழ்வுக்கான வழிகளை ஏற்படுத்தி மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும். ரவுடிகளின் கூடாரமாக மாறிவரும் பெரம்பலூரில் அமைதி திரும்பவும் மக்கள் நிம்மதியாக வாழவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொலை சம்பவங்களைத் தொடர்ந்து ஏராளமான ரவுடிகளை காவல் துறையினர் கைது செய்து வருகின்றனர். அவர்களின் குற்றப் பின்னணிகளை கண்டறிந்து பிணையில் வரமுடியாத கடுமையான சட்டப் பிரிவுகளில் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மீட்டு மறுவாழ்வுக்கான ஏற்பாடுகளை செய்து தர வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.