பெரம்பலூர்:தமிழ்நாடு அரசின் கடந்த 2022-23 பட்ஜெட்டில், கோவை, பெரம்பலூர், மதுரை, வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், புதியதொழில் பூங்காக்கள் (தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம்) அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி பெரம்பலூர் மாவட்டம் எறையூர் கிராமத்தில் 243 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள சிப்காட் தொழில் பூங்காவினை தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த ஆண்டு நவம்பர் 22 ஆம் தேதி திறந்து வைத்து, அதில் அமைய உள்ள ஃபீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார்.
அப்போது, தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்துக்கும், கோத்தாரி ஃபீனிக்ஸ் அக்கார்டு நிறுவனத்துக்கும் ஆயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்பில் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம் 25ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது. மேலும், தைவான்நாட்டைச் சேர்ந்த 10 தொகுப்பு நிறுவனங்களுடன், 740 கோடி ரூபாய் முதலீட்டில், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
இதனைத்தொடர்ந்து காலணி பூங்கா அமைப்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் சிப்காட் தொழில் பூங்காவில் தொடங்கப்பட உள்ள காலனிகள் தயாரிக்கும் தொழிற்சாலை நிறுவனத்தின் தலைவர் ஜின்னா ரபீக் அஹமது பெரம்பலுார் மாவட்டத்திற்கு இன்று வருகை தந்து, மாவட்ட ஆட்சியர் க.கற்பகத்தை சந்தித்து பேசினார்.