பெரம்பலூர் மாவட்டம் பிலிமிசை கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம் - கீதா தம்பதின் மகள் இலக்கியா. ஏழாம் வகுப்பு படிக்கும் இவர் மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கராத்தே போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.
'கராத்தே கிட்' இலக்கியாவுக்கு ரூ.3 லட்சம்; பாரிவேந்தர் அறிவிப்பு!
பெரம்பலூர்: சர்வதேச அளவிலான கராத்தே போட்டியில் இரண்டு தங்கம் வென்ற இலக்கியாவுக்கு ரூ.3 லட்சம் பரிசுத் தொகையை ஐ.ஜே.கே கட்சி நிறுவனர் பாரிவேந்தர் அறிவித்துள்ளார்.
பல்வேறு அமைப்புகள் சார்பிலும் பரிசுத்தொகையும், பாராட்டுகளும் குவிந்து வரும் நிலையில், நேற்றைய தினம் கிராம பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் நடத்தி வரும் எஸ்ஆர்எம் பல்கலைக் கழகம் சார்பில் ரூ. 3 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாரிவேந்தர் கூறுகையில், "சாதாரண நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த இலக்கியா, தனது விடா முயற்சியால் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தி இருக்கிறார். கராத்தே போட்டி இரண்டு தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ள இலக்கியாவை பாராட்டுகின்ற வகையில் எஸ்ஆர்எம் பல்கலைக் கழகத்தின் சார்பில் ரூ. 3 லட்சம் பரிசுத்தொகை வழங்குகிறோம். எதிர்காலத்தில் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு சாதனை படைக்கவும் அவருக்கு உதவிகள் செய்து தரப்படும்" என்றார்.
இலக்கியாவின் தங்கப்பதக்கம் மற்றும் அவரது கோரிக்கை குறித்து ஈடிவி பாரத்தில் நேற்று செய்தி வெளியானது. இதையடுத்து ரூ.3 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருப்பதால், செய்தி வெளியிட்ட ஈடிவி பாரத்திற்கும், பரிசுத்தொகை அறிவித்த ஐ.ஜே.கே நிறுவனர் பாரிவேந்தருக்கும் நன்றி தெரிவித்தார் இலக்கியா.