நாமக்கல்: டிஜிபி சைலேந்திர பாபுவை நேரில்பார்க்க வேண்டும் எனக் கோரி, நாமக்கல்லில் 150 அடி உயரத்தில் பெட்ரோல் கேனுடன் செல்போன் டவரில் ஏறி இளைஞர் போராட்டம் நடத்தினார். 1 மணி நேர போராட்டத்திற்குப் பின், தீயணைப்புத் துறையினர், அந்த இளைஞரை, பேச்சுவார்த்தை நடத்தி மீட்டனர்.
நாமக்கல் மோகனூர் சாலையில் பி.எஸ்.என்.எல். அலுவலக வளாகத்தில் சுமார் 300 அடி உயரத்தில் செல்போன் டவர் அமைந்துள்ளது. இந்த செல்போன் டவரின் 150 அடி உயரத்தில் இளைஞர் ஒருவர் பெட்ரோல் கேனுடன் திடீரென ஏறிக்கொண்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் மனு ஒன்றையும் பொது மக்களிடம் வழங்கிவிட்டு ஏறி உள்ளார்.
இளைஞர் சுரேஷ், பொதுமக்களிடம் வழங்கி இருந்த மனுவில், ''என் பெயர் சுரேஷ், நான் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவன். எனக்கு தாய், தந்தை, உற்றார் உறவினர் கிடையாது. நான் இம்முயற்சியில் ஈடுபட்டது, யாரையும் தொந்தரவு செய்யும் நோக்கத்தில் இல்லை. நான் இம்முயற்சியில் ஈடுபட்டதன் காரணம் சைலேந்திர பாபு அய்யாவை நேரில் பார்க்க வேண்டிய ஆவலின் காரணமாகவே. அவர் மீது மிகுந்த பற்று
கொண்டவன். நான் அவர் மீது பற்று ஏற்படக் காரணம்.
கடந்த 02.10.2017 அன்று அய்யா அவர்கள் சேலம் மத்திய சிறைக்கு சுற்று வந்த போது, நான் ஒரு கார் வழக்கில் அங்கு இருந்தேன். அய்யா அன்று எங்கள் முன் பேசிய வார்த்தைகளும், செய்த செயலும் என் உள்ளத்தில், உங்களை என் தாய், தந்தை, உற்றார் உறவினர் அனைவரின் அன்பின் பிரதிபலிப்பைக் கண்டேன். எங்களை போன்ற ஏழை சிறைவாசிகளின் கஷ்டங்களை அறிந்து மனிதனின் அன்றாடத் தேவையே குற்றத்தின் காரணம். அதில் உணவு முக்கியம்.