தமிழ்நாடு

tamil nadu

ஃபிபா உலகக்கோப்பையில் அசத்தவிருக்கும் தமிழ்நாடு வீராங்கனை

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 17 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான இந்திய அணியில் நாமக்கல் வீராங்கனை இடம்பிடித்துள்ளார்.

By

Published : Jul 28, 2019, 8:56 AM IST

Published : Jul 28, 2019, 8:56 AM IST

ஃபிபா உலகக்கோப்பையில் தமிழ்நாடு வீராங்கனை

பொதுவாக, எந்த விளையாட்டாக இருந்தாலும், தங்களது நாட்டுக்காக உலகக்கோப்பை தொடரில் பங்கேற்று விளையாட வேண்டும் என்பதுதான் அனைத்து வீரர், வீராங்கனைகளின் கனவாக இருக்கும்.

சமீபத்தில் மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடர் முடிந்த நிலையில், 2020இல் 17 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் ஜூலை மாதம் டெல்லியில் நடைபெறவுள்ளது.

இந்தத் தொடர் மூலம், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் வீராங்கனை மாரியம்மாள் தனது கனவை நனவாக்கவுள்ளார்.

சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியைச் சேர்ந்த விசைத்தறி தொழிலாளர்களான பாலமுருகன் - காந்திமதி தம்பதியின் மகள் மாரியம்மாள் (17). இவர் தற்போது நாமக்கல் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துவருகிறார்.

கால்பந்து போட்டியில் தனது சகோதரரின் ஆர்வத்தைக் கண்ட இவர், எட்டாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து கால்பந்து விளையாட தொடங்கியுள்ளார். இதையடுத்து, பத்தாம் வகுப்பு படித்த பின்னர், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இயங்கும் விடுதியில் சேர்ந்தார்.

அங்கு கால்பந்தாட்ட பயிற்சியாளர் கோகிலாவிடம் பயிற்சி மேற்கொண்டு தனது ஆட்டத்தை மெருகேற்ற தொடங்கினார். இதைத்தொடர்ந்து, மாவட்ட அளவிலான போட்டிகளில் அசத்திய இவர், தேசிய அளவிலான போட்டியில் தமிழ்நாட்டு அணி சார்பாக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.

இதனையடுத்து தெலங்கானா, மணிப்பூர், ஒடிசா, மகராஷ்டிரா, கோவா உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்ற இவர், தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக, கடந்த ஆண்டு கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் 12 கோல்கள் அடித்து தனது அணியை வெற்றிபெறச் செய்தார்.

இதனால், இவர் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் டெல்லியில் நடைபெறும் 17 வயதுக்குட்பட்ட மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான இந்திய அணியில் 18 வீராங்கனைகளில் ஒருவராக தேர்வாகியுள்ளார். இதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் இருந்து மாரியம்மாள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து இந்திய அணியில் இடம் பெற்றுள்ள மாணவி மாரியம்மாள் கூறுகையில்,

"என்னுடைய சகோதரரால்தான் கால்பந்து விளையாட்டு மீது ஆர்வம் காட்டத்தொடங்கினேன். பின், எனது பயிற்சியாளர் கோகிலா எனக்கு தந்த சிறப்பான பயிற்சியின் மூலம், தற்போது உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் தேர்வாகி உள்ளேன். நிச்சயம் இந்தத் தொடரில் நான் சாதிப்பேன்.

நான் கால்பந்து பயிற்சியாளராக ஆகவேண்டும் என்பதுதான் என எதிர்கால கனவு. என்னுடன் பயிற்சி பெறும் வீரர்களை இதேபோல் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் விளையாட வைப்பது என்னுடைய குறிக்கோள்" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details