நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கரி, உமிக்கழிவு, சாம்பல் மண் ஆகியவற்றை சலித்து அதிலிருந்து தங்கம், வெள்ளி, செம்பு உள்ளிட்டவைகளை பிரித்தெடுக்கும் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் மீதமாகும் கழிவுமண்ணை விற்பனை வெளியில் விற்பனை செய்வதை கனிம வளத்துறை அலுவலர்கள் தடுக்கின்றனர்.
கனிமவளத்துறை அலுவலர்களை பணியிட மாற்றம் செய்ய கோரிக்கை..!
நாமக்கல் : நகை பட்டறை கழிவுச் சாம்பல் மண்ணை எடுத்துச் செல்ல லஞ்சம் கேட்கும் கனிமவளத்துறை அலுவலர்களை பணியிட மாற்றம் செய்யக் கோரி 800-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இது குறித்து அப்பகுதி தொழிலாளிகள் கனிம வளத்துறை அலுவலர்கள் சிறைப்பிடித்துள்ள லாரிகளை விடுவிக்க கோரி மாவட்ட ஆட்சியர், கனிம வளத்துறை உயர்அலுவலர்களிடம் மனு அளித்தும் விடுவிக்கப்படவில்லை. இதனால் எங்கள் பகுதிக்கு கழிவுமண்ணை வாங்க யாரும் வராததால் தொழில் பாதிப்படைகிறது எனக்கூறி சேந்தமங்கலம், காதப்பள்ளி, அகரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மாவட்டஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.
இதுக்குறித்து நாமக்கல் மாவட்ட மண் பிரித்தெடுக்கும் தொழிலாளர்கள் நலச்சங்க தலைவர் நடராஜன் கூறுகையில், "இது இயற்கை மண் அல்ல , இது செயற்கையாகத் தயாரிக்கப்படும் மண். இதன்மீது கனிம வளத்துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க முடியாது. ஆனால் நாமக்கல் கனிம வளத்துறையில் பணியாற்றும் உதவி இயக்குனர், உதவி ஆய்வாளர் உள்ளிட்டோர் அதிகளவு கையூட்டு பெறுவதற்காகவே இவ்வாறு செயல்படுகின்றனர். மேலும் சம்பந்தப்பட்ட அலுவலர்களை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும். அதுமட்டுமில்லாமல் சிறைப்பிடித்துள்ள லாரிகளை விடுவிக்கவேண்டும் என்றார்.