நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த முள்ளுக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ரேவதி. இவர் நேற்று (அக் 4) அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவரை கொடிய விஷம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு கடித்துள்ளது. உடனடியாக அவருடன் வேலை செய்து கொண்டிருந்த மற்றவர்கள் அந்த பாம்பை லாவகமாக பிடித்து டப்பாவில் அடைத்து வைத்தனர்.
அதேநேரம் ரேவதியை சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனையடுத்து மருத்துவர்கள் எந்த வகை பாம்பு கடித்தது என ரேவதியிடம் கேட்டுள்ளனர். அதற்கு டப்பாவில் இருந்த பாம்பை மருத்துவர்களிடம் ரேவதி காண்பித்துள்ளார். இதனால் மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மருத்துவமனையிலும் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின் ரேவதிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.