தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிணத்த எரிக்குறப்ப சிவனோட அம்சமா நினைப்பேன்... மயான மகள் ஜெயந்தியின் கதை! - மயான மகள் ஜெயந்தி

இந்து சமயத்தைப் பொறுத்துவரை இறுதிசடங்கின்போது, பெண்கள் வீதிவரை மட்டுமே வருவதற்கு அனுமதி என்ற நிலையில், மின்மயானத்தில் சடலங்களை எரியூட்டும் பெண்ணாக ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறார், நாமக்கல்லைச் சேர்ந்த ஜெயந்தி. பிராமண சமூகத்திலிருந்து, மயானத்தில் வேலை செய்யும் முதல் பெண்ணான இவர், பல எதிர்வினைகளைத் தாண்டி இப்பணியில் ஈடுபட்டுள்ளார்.

மயான மகள் ஜெயந்தி
மயான மகள் ஜெயந்தி

By

Published : Jun 22, 2021, 3:19 PM IST

Updated : Jun 23, 2021, 4:10 PM IST

நாமக்கல்: நாமக்கல் கூலிப்பட்டி கிராமத்தை சேர்ந்த தம்பதி பட்டு குருக்கள், பர்வதவர்த்தினி ஆகியோரின் 3 பெண் குழந்தைகளில், கடைக்குட்டிதான் ஜெயந்தி. பட்டு குருக்களுக்கு கோயில் பணியில் கிடைக்கும் சொற்ப வருமானம்தான் வாழ்வாதாரம்.

அதைக் கொண்டு முதல் இரண்டு பெண் குழந்தைகளுக்கும் பள்ளிப் படிப்பு முடித்த கையோடு திருமணம் செய்து அழகுபார்த்தார். படிப்பில் கெட்டிக்காரியான கடைக்குட்டி ஜெயந்தி, தந்தையின் கல்யாண ஏற்பாட்டில் இருந்து தப்பி கல்லூரிக்கு சென்று, முதுகலை பொருளாதாரம் கற்று தேர்ந்தார்.

மயான மகள் ஜெயந்தி

ஆச்சர்யமூட்டும் ஜெயந்தி

ஜெயந்தியின் தந்தை பட்டுக்குருக்கள் இறந்தபோது, அவருக்கு இறுதிசடங்கு செய்ய உறவினர்கள் கூட முன்வரவில்லை. மனமுடைந்த ஜெயந்தி, பல போராட்டங்களுக்கு பின்னர் தந்தைக்கு இறுதிசடங்கு செய்துமுடித்தார். தொடர்ந்து, தாயும் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் விழவே, ஜெயந்திக்கு வேலைக்குப் போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

மயான மகள் ஜெயந்தியின் கதை!

எந்த வேலை கிடைத்தாலும் சென்றுவிடும் மனநிலையில் இருந்த ஜெயந்திக்கு, நாமக்கல் மின் மயானம் அமைக்கும்போது, அங்கு தோட்டப்பராமரிப்பு பணி கிட்டியுள்ளது. மண்டை ஓடு, எலும்புகள் என திகிலாக இருந்த மயான வளாகத்தை, மலர்வனமாக மாற்றினார் ஜெயந்தி.

மின் மயான பணிகள் நிறைவடைந்தபோது, ஜெயந்தியை வேலைக்கு வரவேண்டாம் என அலுவலர்கள் கூறியுள்ளனர். தன்னுடைய இக்கட்டான பொருளாதார சூழலில், இப்படி ஒருநாள் வரும் என ஜெயந்தி கொஞ்சமும் எதிர்ப்பார்க்கவில்லை.

ஊதியம் இல்லாத ஒருமாத வேலை

அதே மயானத்தில், சிதையூட்டிய ஆண்கள் வேலை விட்டு செல்லவே, அதே பணியை செய்வதாக, ஜெயந்தி உறுதிபட கூறியுள்ளார். சவாலான இந்த வேலையில், ஒரு பெண் ஈடுபடுவதாக தெரிவித்தது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மயான மகள் ஜெயந்தி

தன்னை நிரூபிக்கும் கட்டாயத்தில் இருந்த ஜெயந்தி, தான் பார்க்கும் வேலைக்கு எவ்வித ஊதியம் பெறாமல் ஒருமாதம் வேலை செய்துள்ளார். ”ஜீவன் போன உடல்களை சிவனின் அம்சமாகவே பார்த்தேன். அவர்களுக்கு செய்வதை வழிபாடாகவே ஏற்றுக் கொண்டேன். அதனால் பயம் துளியும் ஏற்படவில்லை.

மயானத்தில் வேலை செய்யும் முதல் பிராமணப் பெண்

எனது அர்ப்பணிப்பும் ஈடுபாடும்தான் அந்த வேலை எனக்கு கிடைக்க வழி செய்தது. 2013இல் இருந்து ஆத்மார்த்தமாக இந்தப் பணியைத் தொடர்கிறேன். தற்போது சேந்தமங்கலத்தில் உள்ள ஈஷா அறக்கட்டளையின் மின் மயானத்தில் தகன மேடையின் மேலாண்மைப் பணி, தோட்ட வேலை, உடல் தகனம் என அத்தனை பணிகளையும் கவனிக்கிறேன்”என மெல்ல புன்னகைக்கும் ஜெயந்திதான், பிராமண சமூகத்தில் சிதையூட்டும் பணியாளராக வேலை செய்யும் முதல் பெண் ஆவார்.

வீர தீர செயல் புரியும் சாதனைப் பெண்களுக்கு, வழங்கும் `கல்பனா சாவ்லா’ விருதை, 2016-ம் ஆண்டு முதலமைச்சர் ஜெயலலிதாவிடமிருந்து பெற்ற முதல் பெண்ணும் ஜெயந்திதான். இவர் இதுவரை 6 ஆயிரம் சடலங்களை எரியூட்டியுள்ளார்.

கல்பனா சாவ்லா விருது பெறும் ஜெயந்தி

சாதியை கடந்த ஜெயந்தி

“நான் கல்லூரி விழாக்களை தொகுத்து வழங்குவேன். அப்படி ஒருநாள் தொகுத்து வழங்கும்போது, என்னைக் கவனித்த வாசுதேவன், நிகழ்ச்சி முடிந்த பின்னர் பாராட்டினார். அப்படிதான் எங்களுக்குள் நட்பு ஏற்பட்டது.

இந்த நட்புதான், எங்களை தொழிலில் இணைய வைத்தது. இருவரும் இணைந்து டிராவல்ஸ் நடத்தினோம்’என கடந்தகாலத்தை பகிர்ந்து கொள்கிறார் ஜெயந்தி. நண்பர்களாக இருந்த ஜெயந்திக்கும், வாசுதேவனுக்கும், மனம் ஒத்துபோகவே இருவரும் திருமணம் செய்தனர். இந்தத் திருமணம் ஜெயந்தியின் வாழ்க்கைப் பயணத்தில் பல திருப்புமுனைகளை ஏற்படுத்தியுள்ளது.

கரோனா காலத்திலும் கடமை தவறாத மயான மகள்

கரோனா காலத்திலும் கடமை தவறாத மயான மகள்!

உலகையே கரோனா ஆட்டிப்படைத்த காலத்தில், ஜெயந்தி முழு மூச்சாக தன் பணியினை செய்து கொண்டிருந்தார். கடந்த மார்ச் மாதம் முதல் நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தபோது, இவர் ஓய்வின்றி களத்தில் பணிசெய்தார்.

அதன் பலனாக, கரோனா தொற்று பாதிக்கப்பட்டு, சில நாள்கள் அவதியுற்றார். சில நாள்களுக்கு முன்னர் பூரண குணமடைந்த ஜெயந்தி, மீண்டும் தனது பணிக்கு திரும்பியுள்ளார்.

“ஆண்கள்தான் எல்லா வேலையையும் செய்ய முடியும் என்பதில்லை. பெண்கள் எதற்கும் சளைத்தவர்கள் இல்லை. பெண் வாரிசுகள் மட்டுமே இருந்த என் குடும்பத்தில் அப்பாவின் இறுதிச்சடங்கின்போது பல்வேறு சிரமங்களைச் சந்தித்தேன். அம்மா இறந்தபோது நானே அவருக்கான இறுதிச்சடங்கை செய்துமுடித்தேன். சடலங்கள் கூட தான் வாழ்க்கை போயிட்டு இருக்கு. அவைகளுக்கு சாதி வேறுபாடில்லை’என பேசிமுடிக்கும் ஜெயந்திக்கு, தன் வேலையில் பூரண திருப்தி.

முகம் சுளிக்காமல் பணியாற்றும் ஜெயந்தி

இரட்டை குழந்தைகளுக்கு தாயான ஜெயந்தி, குழந்தைகளுக்கு தன் பணி குறித்து நல்ல புரிதலை ஏற்படுத்தியுள்ளார். அவரது கணவர் வாசுதேவன், தனியார் டிராவல்ஸ் நடத்தி வருகிறார். மயனான மகளான ஜெயந்திக்கு, அவரது குடும்பத்தினர் பக்கபலம் என்றால் அது மிகையல்ல.

இதையும் படிங்க: கப்பற்படை விமானத்தின் முதல் பெண் விமானி சிவாங்கி ஸ்வரூப்!

Last Updated : Jun 23, 2021, 4:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details