பெண்கள், ஆண்களுக்கு நிகராக எத்தனையோ துறைகளில் சாதித்து வருகின்றனர். ஆனால் ஆட்டோ ஓட்டும் தொழிலில் பெண்களின் பங்களிப்பு சற்று குறைந்தே காணப்படுகிறது. அதற்கு காரணம் இந்த தொழிலில் உள்ள பாதுகாப்பாற்ற சூழல்.
இப்படியிருக்க தன்னம்பிக்கையினால் நாமக்கல் மாவட்டம் தூசூர் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மனைவி உஷா (45) முதல் பெண் ஆட்டோ ஓட்டுநராக வலம் வருகிறார். இவரின் மகளுக்கு அண்மையில் திருமணமாகி ஆண் குழந்தை பிறந்துள்ளது. குடும்பத்தில் போதிய வருமானம் இல்லாததால் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் கடனாக பணம் பெற்று, ஆட்டோ வாங்கி ஒரு வருடமாக அதை ஓட்டி வருகிறார்.
ஆட்டோ ஓட்டும் ஆர்வம் குறித்து உஷா கூறும்போது, "ஆண் குழந்தை பிறக்கும் என நம்பிக்கையில் இருந்த எனது தந்தைக்கு மூன்றும் பெண் குழந்தைகளாக பிறந்தோம். கடைசியாக பிறந்த என்னை ஒரு ஆண் குழந்தை போல் பாவித்து தந்தை வளர்த்தார். மேலும் ஆட்டோ, லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களை இயக்க தந்தை கற்றுக் கொடுத்தார். கணவரின் லாரி ஓட்டும் தொழிலில் போதிய வருமானம் இல்லை. எனவே, தனியார் நிதி நிறுவனத்தில் கடனாக பணம் பெற்று ஆட்டோ வாங்கி ஓட்டி வருகிறேன்" என்றார்.