பல வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்தில், முக்கிய பேசுபொருளாகயிருந்தது, கைத்தறி ஆடைகள். உள்ளூர் தொழிலான இது, 2000ஆம் ஆண்டுவரை ஓரளவு நன்றாகத்தான் இயங்கிவந்தது. விசைத்தறி அறிமுகமானதும், கைத்தறி தொழில் பின்னடைவைச் சந்திக்கத் தொடங்கிவிட்டது.
விசைத்தறி மூலம் நெய்யப்படும் துணிகள் கைத்தறி அளவுக்கு தரமானதில்லை என்று விமர்சனம் எழுந்தாலும்கூட, விற்பனையில் அதுதான் முன்னிலை வகிக்கிறது. இப்படி, ஏற்கனவே, நலிவடைந்த கைத்தறி நெசவுத்தொழில், ஊரடங்கால் இன்னும் சிரமத்திற்குள்ளானது. நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையம் கைத்தறி பட்டுக்கு பிரசித்திப் பெற்றது. இங்கு, அநேக நெசவாளர்கள், பாரம்பரியமாகத் கைத்தறியில் பட்டு நெசவு செய்துவருகின்றனர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், முகூர்த்தப் புடவைகள், பட்டாடைகள் இங்குதான் தயாராகின்றன.
200க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கைத்தறி பட்டு நெசவு தொழிலை நம்பியிருக்கின்றனர். ஆரணி, காஞ்சிபுரம், கோவை, ஈரோடு, சத்தியமங்கலம், தொட்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள முகவர்கள் பட்டு நெய்வதற்கான பட்டு நூல்களையும், அதற்கான வடிவமைப்பையும் அனுப்பிவைக்கின்றனர். அதனை, வடிவமைக்கும் நெசவாளர்களிடமிருந்து, பட்டுப்புடவைகள் சரக்கு வாகனங்கள் மூலம் ஆரணி, காஞ்சிபுரம், கோவை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
ஒரு பட்டுபுடவையை இருவர் நெய்தால், நான்கு நாட்கள் புதிய புடவை தயாராகும். பட்டுப்புடவையின் ரகத்தை பொருத்து ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரையில் கூலியாக பெற்றுவருகின்றனர். ஆனால், கரோனா ஏற்படுத்திய நெருக்கடி, தற்போது வாழ்வாதாரத்தை மொத்தமாக அசைத்து பார்த்துவிட்டது. நெய்து முடித்த முகூர்த்தப் பட்டுப்புடவைகள் அனுப்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வர வேண்டிய கூலியும் வந்து சேரவில்லை. மேலும், இருப்பிலிருந்த பட்டு நூல்கள் முழுவதும் தீர்ந்ததால், வேறு புடவைகளையும் நெய்வதற்கு வாய்ப்பில்லை.
தற்போதைய நிலைமை குறித்து, பட்டு நெசவாளர் முத்துகிருஷ்ணன், “பாரம்பரியமாகப் பட்டு நெசவு தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். முகூர்த்த பட்டுப் புடவைகளையும் கொண்டுச் செல்வதற்கும், முதலாளிகளிடமிருந்து, பட்டு நூலை எடுத்து வரவும் அனுமதியில்லை. போக்குவரத்து அனுமதியளிக்கப்பட்டால் எங்களுக்கு உதவியாகயிருக்கும். ஊரடங்கு ஏற்படுத்திய பாதிப்பு மிகுந்த நஷ்டத்தைக் கொடுத்துள்ளது. அரசு மற்ற தொழிலாளர்களைப் போல எங்களுக்கும் உதவ வேண்டும்” என்றார்.
ஊரடங்கில் நெசவாளர்கள் சந்திக்கும் நெருக்கடிகள் இது குறித்து நெசவாளர் கோபால் கூறுகையில், “30 வருடங்களாக பட்டு நெசவிலிருக்கிறேன். இது போன்ற நெருக்கடியை நான் சந்தித்ததில்லை. தமிழ்நாடு அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளது. ஆனால், குடும்பத்தில் இருவர் இருந்தாலும், 5 பேர் இருந்தாலும் 1000 ரூபாய் மட்டும்தான் என்பது பற்றாக்குறையைதான் உண்டாக்கும். குடும்பத்தில் உள்ள நபர்களின் எண்ணிக்கையைப் பொருத்து உதவித்தொகை வழங்க வேண்டும். நெசவு தொழில் நலவாரியத்தில் பதிவு செய்து வைத்திருந்தும், அமைப்புசார்ந்த தொழிலாளர்களுக்கு அரசு வழங்குவதாக கூறிய ஆயிரம் ரூபாய் இதுவரை எங்களுக்கு வந்து சேரவில்லை. அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.
இதையும் படிங்க: அதிகரிக்கும் கரோனா - அச்சத்தில் பத்திரிகையாளர்கள்!