நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த அத்தனூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாச்சலம். இவர் தனியார் பள்ளியில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.
இவருடைய மகன் முரளிதரன் (22) எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். முரளிதரனை மின் ஊழியர்கள் பணிகளுக்கு அடிக்கடி பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் அத்தனூரில் மின் கம்பம் பழுதானதால் சம்பவ இடத்திற்கு வந்த மின் ஊழியர்கள் சதிஷ் மற்றும் மாரிமுத்து ஆகியோர் மின்கம்பத்தில் ஏறி பழுது பார்க்காமல் எலட்ரீசியன் முரளிதரனை அழைத்து கம்பத்தில் ஏறி பழுதுபார்க்க கூறியுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில், முரளிதரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவத்திற்கு மின் ஊழியர்களான சதீஷ், மாரிமுத்து ஆகியோர் தான் காரணம் என கூறி உறவினர்கள், பொதுமக்கள் என 300க்கு மேற்பட்டோர் ராசிபுரம் - ஆட்டையாம்பட்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது வாக்குவாதம் ஏற்பட்டதால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து போராட்டத்தைக் கைவிட்டனர். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மின் ஊழியர்கள் இருவரையும் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
இதையும் படிங்க:வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை: 4 பேர் கைது