கல்யாணமோ, காதுகுத்தோ, நல்லது, கெட்டது எந்தவொரு வீட்டு விஷேசமா இருந்தாலும் சரி, தாம்பூலத் தட்டில் இருக்கும் வெற்றிலையை எடுத்து வாய் மணக்க, நாக்கு செவக்க வெற்றிலையை போடாவிட்டால் மக்களின் மனம் திருப்தியே அடையாது. தமிழர்களின் பண்பாட்டு கலாசாரத்தோடு ஒன்றிபோய் இருக்கிறது வெற்றிலை.
பச்சை இலைதானே அதில் என்ன மகிமை இருக்கிறது என்று சிலர் கேட்கலாம். மூன்று வேளை சாப்பாட்டு பழக்கம்போல் தமிழர்களின் பழக்க வழக்கமாக வெற்றிலை போடும் பழக்கம் மாறிவிட்டது. கருப்பு வெள்ளை சினிமா முதல், சூப்பர் ஸ்டார் வரை வெற்றிலையின் மவுசைப் பற்றி பாட்டு பாடி ஆடியுள்ளனர்.
"வெத்தலை வெத்தலை வெத்தலையோ கொழுந்து வெத்தலையோ, வாடி வெத்தலை பாக்கு நீயும் போட்டுக்கோ" என்ற பாட்டிற்கு ஆடாத கால்களும் உண்டோ. துள்ளித் தவழ்ந்து விளையாடும் வயதில் நம்ம வீட்டு தாத்தா, பாட்டிகளிடம் கொழுந்து வெத்தலையைக் கிள்ளி சாப்பிடும் நினைவுகளை பேசி மகிழ்ந்ததுண்டு.
வெற்றிலையில் வெள்ளைக்கொடி, கற்பூரம், பச்சைக்கொடி ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. வெற்றிலை இயற்கை மகத்துவம் கொண்ட மூலிகையாகும். மனித வாழ்வில் அற்புதத்தை நிகழ்த்தும் வெற்றிலை மலேசியாவைப் பிறப்பிடமாகக் கொண்டுள்ளது. இது, இந்தியா, இந்தோனேசியாவில் அதிகமாக பயிரிடப்படுகிறது.
குட்கா பொருட்களின் வளர்ச்சி, வெற்றிலையின் வளர்ச்சியைக் குறைக்கத் தொடங்கின. இருப்பினும், இன்றளவும் வெற்றிலை கல்யாண நிகழ்ச்சிகளில் மிகவும் செரிமானத்திற்கு உதவும் அருமருந்தாக மாறியுள்ளது. இப்புகழுக்குப் பெயர்போன புகழ்பெற்ற வெற்றிலை தமிழ்நாட்டில், கும்பகோணம், தஞ்சாவூர், நாமக்கல் ஆகியப் பகுதிகளில் விளையும் வெற்றிலைக்கு மவுசு அதிகம்.
ஆனால் தற்போது வெற்றிலையைச் சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்துத் தவித்துவருகின்றனர். குறிப்பாக, கரோனா வைரஸ் தொற்றால் நாமக்கல் பகுதியில் வெற்றிலை சாகுபடி செய்துள்ள விவசாயிகளின் கதைகளை கேட்டால் வெற்றிலைக்கூட கண்ணீர் வடிக்கும்.
நாக்கு செவக்க சிரிப்பலையைத் தரும் வெற்றிலை, தற்போது கருத்து நோய் வந்து இறந்து கிடக்கின்றன. இந்த வெற்றிலையின் சோகக்கீதத்தை பற்றிய ஒரு பார்வை.
நாமக்கல் மாவட்டத்தில் வெங்கரை, பாண்டமங்கலம், பொத்தனூர், பரமத்திவேலூர், பாலப்பட்டி, மோகனூர் உள்ளிட்ட காவிரிக்கரை ஓரங்களில் 1000-க்கும் மேற்பட்ட ஏக்கர்களில் வெற்றிலை பயிர் சாகுபடி செய்யப்படுகிறது.
இங்கு அறுவடை செய்யப்படும் வெற்றிலை சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் கற்பூரம், பச்சைக்கொடி போன்ற ரக வெற்றிலைகளைச் பேருந்து, லாரிகள் மூலம் கொண்டுசெல்லப்படுகிறது.
ஊரடங்கால் உயிரிழந்த வெற்றிலை...