தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பரமத்தி வேலூர் அருகே பட்டா மாறுதல் செய்ய லஞ்சம்: விஏஓ கைது

நாமக்கல்: பரமத்திவேலூர் அருகே பட்டா மாறுதல் செய்ய ரூ.4,000 லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர் ஆகிய இருவரைக் கைதுசெய்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

PARAMATHIVELUR
PARAMATHIVELUR

By

Published : Oct 9, 2020, 11:22 AM IST

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள வீரணம்பாளையத்தைச் சேர்ந்தவர் குணவதி. இவர் தனக்குச் சொந்தமான நிலத்தை அதே பகுதியைச் சேர்ந்த குணசேகரன், சுந்தரர் ஆகியோருக்கு விற்பனை செய்துள்ளார்.

இந்த நிலத்திற்கான பட்டாவில் பெயர் மாறுதல் செய்வதற்காக குணசேகரன் கடந்த மாதம் பரமத்திவேலூர் தாலுகா வீரணம்பாளையம் கிராம நிர்வாக அலுவலருக்கு மனு செய்துள்ளார்.

ஆனால், நிலத்திற்கான பட்டாவில் பெயர் மாறுதல் செய்வதற்காக ரூ.4,000 லஞ்சம் தரவேண்டும் என கிராம நிர்வாக அலுவலர் லோகாம்பாள் குணசேகரனிடம் கேட்டுள்ளார்.

பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய ரூ.4,000 லஞ்சம் கொடுக்க மனமில்லாமல் இது குறித்து நாமக்கல் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரிடம் புகார் செய்தார்.

இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரின் அறிவுறுத்தலின்படி கிராம நிர்வாக அலுவலர் லோகாம்பாளுக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு ரூ.4000 கொண்டுவந்திருப்பதாக கூறினார்.

அவர் பரமத்திவேலூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு வந்து கொடுக்கும்படி கூறியதை அடுத்து குணசேகரன் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு சென்று பணத்தை கொடுத்துள்ளார்.

ஆனால் கிராம நிர்வாக அலுவலர் அவரது உதவியாளர் கீதாவிடம் பணத்தை கொடுத்துவிட்டுச் செல்லுமாறு கூறியதையடுத்து அவர் கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர் கீதாவிடம் பணத்தைக் கொடுத்துள்ளார்.

இந்நிலையில், அப்பகுதியில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கிராம நிர்வாக அலுவலர், அவரது உதவியாளர் ஆகிய இருவரையும் கையும் களவுமாகப் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் இதுகுறித்து பரமத்திவேலூர் வருவாய் ஆய்வாளர் சோபனா, பரமத்திவேலூர் வட்டாட்சியர் சுந்தரவள்ளி ஆகியோரிடமும் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணை முடிவில் கிராம நிர்வாக அலுவலர் லோகாம்பாள், அவரது உதவியாளர் கீதா ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கைதுசெய்தனர்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details