தர்மபுரி: நாடு முழுவதும் 75ஆவது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காட்டுப்பகுதியில் அமைந்துள்ளது, பன்னப்பட்டி மலைக்கிராமம்.
அடிப்படை வசதிகள் இல்லாத மலைக்கிராமம்
அங்கு 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த 90-க்கும் மேற்பட்ட இருளர் இனமக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில், மின்சாரம், சாலை, போக்குவரத்து உள்ளிட்ட எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லை.
இருளர் குழந்தைகளின் சுதந்திர தின கொண்டாட்ட ஆசை
இந்நிலையில், இருளர் இனமக்களின் குழந்தைகள் 75ஆவது சுதந்திர தின விழாவை கொண்டாட வேண்டும் என தங்களது பெற்றோரிடம் விருப்பம் தெரிவித்துள்ளனர். குழந்தைகளின் பெற்றோர் காட்டிலுள்ள மரத்தினால் கொடிக்கம்பத்தை உருவாக்கி, சுதந்திர தினத்தைக் கொண்டாட முடிவு செய்தனர்.
இருளர் இன மக்களின் சுதந்திர தினவிழா இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பென்னாகரம் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் இன்பசேகரனை அழைத்தனர்.
இதையடுத்து இவ்விழாவில் கலந்துகொண்டு தேசியக்கொடியை ஏற்றி வைத்து குழந்தைகளுக்கு இனிப்புகளையும், நோட்டுப் புத்தகங்களையும் வழங்கினார், இன்பசேகரன். இந்நிகழ்ச்சியில் 40-க்கும் மேற்பட்ட பள்ளிக்குழந்தைகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சி இருளர் இனமக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ’தமிழ்நாட்டில் 3 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது’ - மு.க. ஸ்டாலின்