கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த 'ஜோக்கர்' என்ற திரைப்படத்தில் கட்டாத கழிவறையை, கட்டியதுபோல் கணக்குக் காட்டி பல லட்ச ரூபாய் மோசடி செய்வது போன்ற காட்சிகள் இடம்பெறும். அந்தக் காட்சிகளை எல்லாம் மிஞ்சும் வகையில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா முசிறி ஊராட்சியில் பல முறைகேடுகள் நடந்துள்ளன.
600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவரும் முசிறி ஊராட்சியில், கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள், ஊராட்சியில் கழிவறை கட்டும் திட்டத்தில் பயன்பெற்ற பயனாளிகளின் பட்டியலைக் கேட்டுள்ளனர். அதற்கு ஊராட்சி செயலாளர் செங்குட்டுவன் முறையாகப் பதிலளிக்கவில்லை எனத் தெரிகிறது.
இதையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர், 2015ஆம் ஆண்டு முதல் முசிறி ஊராட்சியில் கட்டப்பட்ட கழிப்பறைகள், வெட்டப்பட்ட நீர்க்குட்டைகள் உள்ளிட்ட தகவல்களைக் கேட்டுதகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ்தகவல் ஆணையத்தில் மனு அளித்திருந்தார். அதில் கிடைத்த தகவல் ராஜ்குமாரை மட்டுமின்றி அந்த ஊராட்சியில் வசிக்கும் பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் விதத்தில் அமைந்திருந்தது
இது குறித்து ராஜ்குமர் கூறுகையில், "எங்கள் வீட்டில் பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிவறை கட்டியதாகக் கணக்குக்காட்டி ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி செயலாளர் ஆகியோர் 2016ஆம் ஆண்டு மோசடி செய்துள்ளனர். இதேபோல் இறந்தவர்கள் பெயரிலும், ஊரைவிட்டு வேறு ஊர்களுக்குச் சென்றவர்களின் பெயரிலும் கழிவறை கட்ட அரசு வழங்கும் பணத்தை முறைகேடு செய்துள்ளனர். இது குறித்து ஊராட்சி செயலாளரிடம் கேட்டபோது உரிய பதிலை தர மறுத்தார். இதுபோல 100 நாள் வேலைத்திட்டத்திலும் ஊழல் நடந்துள்ளது" என்றார்.