நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் நேற்று (ஏப்ரல்.23) மாலை 6 மணிக்கு காற்றுடன் கனத்த மழை பெய்தது. அப்போது, ராசிபுரத்தில் வசிக்கும் பீகாரைச் சேர்ந்த இளைஞர்களான அமிலேஷ் (26), ராஜேஷ் (24) ஆகிய இருவரும் தங்களது இருசக்கர வாகனத்தில் சேலத்திலிருந்து ராசிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அதேபோல் மல்லூர் சுபாஷ் நகரை சேர்ந்த மணிகண்டன் (24), பூபாலன் ( 28) ஆகிய இருவரும் ராசிபுரத்தில் இருந்து மல்லூர் நோக்கி தங்களது இருசக்கர வாகனத்தில் சென்றனர்.
ராசிபுரம் - சேலம் பிரதான சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் மழையால் சாலையில் இரண்டு வாகனங்களும் நேருக்கு நேர் மோதியது. இதில், நான்கு பேரும் கீழே விழுந்து பலத்த காயங்களுடன் மழையில் வலி தாங்க முடியாமல் துடித்துக் கொண்டிருந்தனர்.
இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஆம்புலன்ஸ், இரண்டு பேரை மட்டும் தூக்கிச் சென்றுவிட்டு, மழையில் துடித்துக் கொண்டிருந்த மற்ற இருவரை விட்டுச் சென்றுவிட்டனர்.
ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அலட்சியம் இதனால், கால் ஒடிந்த நிலையில் கிடந்த மற்ற இருவரும் மழையில் துடித்துக் கொண்டிருந்தனர். அதனைத் தொடர்ந்து 20 நிமிடங்களுக்கு பின்னர் வந்த மற்றொரு ஆம்புலன்ஸ், அவர்கள் இருவரையும் தூக்கிச் சென்றதாகச் சொல்லப்படுகிறது.
அந்த நேரத்தில் காலில் படுகாயமடைந்த நபர்களின் உடலிலிருந்து அதிகளவு ரத்தம் சென்றதாக கூறப்படுகிறது. பொதுமக்கள் எவ்வளவு சொல்லியும் அலட்சியமாகச் சென்ற ஆம்புலன்ஸ் ஊழியர்களால், படுகாயமடைந்த இரண்டு பேர் மழையில் தவித்த சம்பவம் ராசிபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.