நாமக்கல்: தை மாதம் வருகிறது என்றாலே தென்மாவட்டங்கள் களைகட்டத் தொடங்கி விடும். அந்த உற்சாகத்திற்கு உழவர் திருநாளாம் பொங்கல் ஒரு காரணம் என்றால், தையைத் தொடர்ந்து வரும் வீர விளையாட்டுகளும் ஒரு காரணம். 2016ஆம் ஆண்டு போராட்டத்திற்கு பின் பட்டிதொட்டி எல்லாம் பிரபலமான ஜல்லிக்கட்டு விளையாட்டு ஆண்டுக்கொரு சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழமையாகி விட்டது. கடந்த ஆண்டு பண்டிகைகளையும், திருவிழாக்களையும் திருடிய கரோனா தொற்று, இந்த 2021 ஜல்லிக்கட்டையும் களவாடி விடுமோ என கலக்கத்தில் இருந்தவர்களுக்கு ஜல்லிக்கட்டு நடத்த தடையில்லை என்ற அறிவிப்பு ஆறுதலாய் அமைந்திருக்கிறது.
அனுமதி கிடைச்சாச்சு அப்புறம் என்ன?
களமாடத் தயாராகி வருகின்றன(ர்) காளைகளும் காளையர்களும்...
அனுமதிக்கப்பட்ட வெளியில் வேகமாக வரும் காளைகளுக்கும், அதை அடக்க காத்திருக்கும் காளையர்களுக்கும் இடையில் அரங்கேறத் தொடங்கும் ஒரு பாரம்பரிய விளையாட்டின் நுணுக்கங்கள், தன் உடல் திணவை நம்பி இறங்கும் காளைகளும், அதன் அடுத்தடுத்த நகர்வுகளை யூகித்து, அதற்கேற்றபடி காயமடையாமல் விளையாடும் வீரர்கள் நிகழ்த்தும் கலை தான் ஜல்லிக்கட்டு.
அதற்கு பின் மறைந்து கிடக்கிறது மாடு, மனிதனின் பயிற்சியும் முயற்சியும்.
வாடிவாசல் தாண்டி, அதிரடி வேகத்தில் களத்தில் நுழைய காளைகளின் கால்களுக்கு சரியான வலுவும், சுளுக்கிவிடாத திறனும் இருக்க வேண்டும், அதற்காக ஜல்லிக்கட்டு காளைகளுக்கு அதிகாலையில் தொடங்கி விடுகிறது நடைபயிற்சி. அடுத்தது, நீச்சல் பயிற்சி, களமாடவரும் போது எதிரில் நிற்கும் இளைஞர் படையை கதிகலங்க வைக்கவும், களத்தில் நின்று விளையாடவும் தினவுகளோடு, மூச்சிரைக்காமலும் இருக்க வேண்டும் அதற்கு உதவுகிறது நீச்சல் பயிற்சி.
அடுத்து, கீழ குனிந்து கொம்பு கொடுப்பது போல் பாவலா செய்து தரையை குத்தி கிளறி எதிரிலிருப்பவர்களை ஏமாற்றி தன்னை நெருங்க விடாமல் செய்ய வேண்டும். அதற்கான பயிற்சியாகிறது கொம்பால் மண்ணைக் குத்தி முயற்சிப்பது.
ஆட்டத்துக்கு தயாராகும் காளைகள் களமாடும் மாடுகளுக்கு இத்தனைப் பயிற்சி என்றால், இளைஞர்களுக்கும் அதற்கு இணையான பயிற்சிகள் உண்டு. உடலினை உறுதி செய்து, வேகமாக வரும் காளையைக் கண்டு கலங்காமல் நிற்க மனதை ஒரு நிலைப்படுத்தி, காளையின் அசைவுகளுக்கு ஏற்ப மதிநுட்பத்துடன் விளையாட, மூத்தவர்களின் அனுபவ அறிவுடன், பயிற்சி பெறும் காளைகளுடன் சேர்ந்தே பயிற்சி எடுக்கிறார்கள் இளைஞர்கள்.
பயிற்சி காலத்தில், காளைக்கும் காளையர்களுக்கும், வழக்கமான உணவுகளுடன் சிறப்பு உணவுகள் கட்டாயம் உண்டு.
இத்தனை உழைப்புக்கு பின் அரங்கேறும், ஜல்லிக்கட்டு விளையாட்டின் பாரம்பரியம் கருதி, ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளுடன், கரோனா கட்டுப்பாடுகளுடன் போட்டி நடத்த அனுமதியளித்துள்ளது. "வரும் ஆண்டில், ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரர்கள் 300 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொள்ள வேண்டும். எருதுவிடும் நிகழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமல் கலந்து கொள்ளலாம். திறந்த வெளியின் அளவிற்கேற்ப அதிகபட்சம் 50 விழுக்காடு அளவிற்கு மிகாமல் பார்வையாளர்கள் கலந்து கொள்ளலாம் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதுபோலவே, இந்தாண்டு காளையுடன் அதன் உரிமையாளர், ஒரு உதவியாளர் என இருவருக்கு மட்டுமே அனுமதி உண்டு. ஜல்லிக்கட்டு காளையுடன் வரும் காளை உரிமையாளர் மற்றும் உதவியாளர் இருவரும் பரிசோதனை செய்து கரோனோ இல்லை என்ற உறுதி சான்று பெற வேண்டும். ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் போட்டி நடைபெறும் 7 நாட்களுக்கு முன்பாக, மாவட்ட நிர்வாகம் வழங்கும் அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும். அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அனுமதி கிடையாது என தெரிவித்துள்ளது.
அனுமதி கிடைக்குமா என்ற நிலையில் அரசின் அனுமதி மாடுபிடி வீரர்களையும், உரிமையாளர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் கரோனா கட்டுப்பாடும் சேர்த்து விளையாட்டை நடத்த முடியுமா என சந்தேகம் கொள்கின்றனர் ஜல்லிக்கட்டு பேரவை குழுவினர். "கரோனா நோய் தொற்று பரவல் சூழ்நிலையிலும் தமிழ்நாடு அரசு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்ததற்கு அரசுக்கு நன்றி. ஊரடங்கு காலத்திலும் நாள் ஒன்றுக்கு 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை காளைகளுக்கு செலவு செய்து பயிற்சி அளித்து வருகிறோம். 50 விழுக்காடு பார்வையாளர்கள், 300 மாடுபிடி வீரர்களுக்கு மேல் இருக்க கூடாது என அரசு அறிவித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, மாடுபிடி வீரர்களின் எண்ணிக்கையை அரசு உயர்த்த வேண்டும்" என்கிறார் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவையின் நாமக்கல் மாவட்டத் தலைவர் முரளி.
இதே கோரிக்கையை முன் வைக்கிறார் மாடுபிடிவீரரான பிரவீன்குமார், "ஐந்து ஆண்டுகளாக மாடுபிடித்து வருகிறேன். இந்த ஆண்டு கரோனா அச்சுறுத்தலால பல ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் ரத்து செய்யப்பட்டன. இந்தாண்டு 300 வீரர்களுக்கு மட்டுமே அனுமதி, கட்டாயம் கரோனா பரிசோதனை போன்ற கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. இதனை தளர்த்தி குறைந்தபட்சமாக, 500 வீரர்களையாவது அனுமதிக்க வேண்டும்" என்கிறார்.
போட்டி நடக்கும் இடத்திற்கு வாகனங்களில் மாடுகளை அழைத்துச் சென்று வருவது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது. அரசோ மாடுகளுடன் உரிமையாளர், உதவியாருக்கு மட்டுமே அனுமதி எனக் கூறியுள்ளது.
"தை மாதத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கவுள்ளதால் குறைவான நாட்கள் மட்டும் உள்ள காரணத்தால் இன்று முதல் காளைகளுக்கு தீவிர பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தாண்டு ஜல்லிக்கட்டு நடக்குமா என்பது கேள்விக்குறியாக இருந்த நிலையில் தற்போது தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது வரவேற்கவேண்டியது. காளையுடன் இருவருக்கு மட்டுமே அனுமதி போன்ற விதிமுறைகளை கொஞ்சம் தளர்த்த வேண்டும்" என தன் விருப்பத்தை பதிவுசெய்கிறார் ஜல்லிக்கட்டு காளை வளர்த்து வரும் கார்த்திக்.
காளைக்கும் மனிதனுக்கும் நடக்கும் விளையாட்டில் இந்தாண்டு தொற்றுப்பரவலும், அரசு கட்டுப்பாடுகளும் இணைந்துள்ளது. அரசின் முன்னெச்சரிக்கையும் வீரர்களின் விருப்பங்களும் ஒத்திசைந்து அடுத்தாண்டுக்கான நல்ல தொடக்கமாக அசம்பாவிதம் இல்லாமல் ஜல்லிக்கட்டு நடக்க வேண்டும்.