நாமக்கல்:திருச்செங்கோடு ஒன்றியம் தோக்கவாடி குச்சிபாளையம் ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் மஞ்சுளா. இவரது கணவர் ஈஸ்வரன். மஞ்சுளா, ஆலாம்பாளையம் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் மஞ்சுளா கடந்த 3 ஆம் தேதி எஸ்.பி.பி. காலனி வாய்க்கால் பாலம் பகுதியில் காலை 8.30 மணி அளவில் பணிக்கு சென்றபோது, இருசக்கர வாகன விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தார். இதனையடுத்து ஆசிரியை மஞ்சுளாவின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதனையடுத்து மஞ்சுளாவின் கண் சிறுநீரகம், இதயம், தோல் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
இதைத்தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் முதல் உடல் உறுப்பு தானம் செய்த அரசு ஊழியர் இவரே ஆவார். இதனால், தமிழ்நாடு அரசு ஆணைப்படி இவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (நவ.5) அடக்கம் செய்யப்பட்டது. அதன்படி மாவட்ட ஆட்சியர் உமா, திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி, திருச்செங்கோடு துணை கண்காணிப்பாளர் இமயவரம்பன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் சார்பில் அவரது இல்லத்தில் அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. அதன் பிறகு முழு அரசு மரியாதையுடன் ஆசிரியர் மஞ்சுளாவின் உடல் தகனம் செய்யப்பட்டது.