நாமக்கல்:தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றன. இந்நிலையில், தமிழ்நாட்டின் முதலமைச்சரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று இரண்டாம் கட்ட தேர்தல் பரப்புரையை நாமக்கல் மாவட்டத்தில் தொடங்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், காலை நாமக்கல் மாவட்டத்தின் பிரசித்திப் பெற்ற ஆஞ்சநேயர் கோயிலில் வழிபட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார். இதைத் தொடர்ந்து சாலையோர வியாபாரிகள் கூட்டத்தில் பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், "ஏழை, எளிய மக்களுக்கு நல்ல திட்டங்களை வழங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் அதிமுக ஆட்சி செயல்பட்டுவருகிறது. சாலையோர கடை வியாபரிகளுக்கு மத்திய கூட்டுறவு வங்கி மூலம் கடன் வழங்கப்பட்டுவருகிறது.
வங்கி மூலம் கடன் பெற்று வாழ்வாதாரத்தைப் பெருக்க மத்திய கூட்டுறவு வங்கியை வியாபாரிகள் அணுகலாம். மத்திய வங்கி மூலம் கடன் பெறுவோர், அதனைப் படிப்படியாகவும் செலுத்தலாம். சேலம் கூட்டுறவு வங்கி சிறப்பாகச் செயல்பட்டு மக்களுக்குத் தேவையான கடன் உதவிகளை வழங்கிவருகிறது.