நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஒருவந்தூரைச் சேர்ந்தவர் சசிக்குமார் (23). கடந்த ஜன. 1ஆம் தேதி இரவு நண்பர்களுடன் மோகனூரில் மது அருந்தி கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த ஒருவந்தூரைச் சேர்ந்த மலர்மன்னன், ரஞ்சித், பிரகாஷ் ஆகிய மூவரும் சசிகுமாரை பீர் பாட்டிலால் தாக்கி கத்தியால் கழுத்தை அறுத்துள்ளனர்.
இதனைக் கண்ட சசிகுமாரின் நண்பர்கள் சத்தம் போட அந்த மூவரும் அங்கிருந்து தப்பி ஓடினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சசிக்குமாரை அவரது நண்பர்கள் மீட்டு சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி கடந்த ஜன. 2ஆம் தேதி சசிக்குமார் உயிரிழந்தார்.
முன்விரோதத்தால் கொலை:
இது குறித்து வழக்குப்பதிவு செய்த மோகனூர் காவல் துறையினர், விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் மலர்மன்னன், ரஞ்சித், பிரகாஷ் ஆகியோருக்கும், கொலைசெய்யப்பட்ட சசிக்குமாருக்கும் காவேரி ஆற்றில் சட்ட விரோதமாக இருசக்கர வாகனத்தில் மணல் அள்ளுவதில் ஏற்கனவே தகராறு இருந்து வந்தது தெரியவந்தது.
இதனால், முன்விரோதம் காரணமாக சசிக்குமாரை மூவரும் சேர்ந்து கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, மூவரையும் காவல் துறையினர் வலை வீசி தேடிவந்த நிலையில் இன்று (ஜன.04) அவர்களது உறவினர்களின் வீட்டில் தலைமறைவாக இருந்த மூவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: சிறுமியிடம் பாலியல் தொந்தரவு: வடமாநில இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு