நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த கர்ப்பிணி ஜெயஸ்ரீ பிரசவத்திற்கான பரிசோதனை மேற்கொண்டுவந்தார். இந்நிலையில் ஜெயஸ்ரீக்கு கடந்த ஜூலை மாதம் 4ஆம் தேதி ஒரே பிரசவத்தில் மிக குறைந்த எடையுடன் மூன்று பெண் குழந்தைகள் பிறந்துள்ளன.
கவலைக்கிடமான நிலையில் இருந்த மூன்று குழந்தைகளையும் தொடர்ந்து ஒரு மாத காலமாக மருத்துவர்களின் கண்காணிப்பில் வைத்து குழந்தைகளுக்கு சிகிச்சையளித்து வந்தனர். அரசு மருத்துவர்களின் தொடர் சிகிச்சையின் காரணமாக தற்போது மூன்று குழந்தைகளும் எடை கூடி, மிக ஆரோக்கியத்துடன் உள்ளன.
பச்சிளம் குழந்தைகளுக்கான சிறப்பு பிரிவு இது குறித்து தாய் ஜெயஸ்ரீ கூறுகையில், “எனக்குத் திருமணமாகி இரண்டரை ஆண்டுகள் குழந்தைகள் இல்லாத நிலையில், கடந்தாண்டு கருவுற்றேன். எனக்கு மூன்று கருக்கள் உருவானதால் கரோனா காலத்தில் எங்களால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற முடியவில்லை. அப்போதுதான் நாமக்கல்லிலுள்ள உறவினர் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டேன்.
அங்கு, எனக்குப் பிறந்த மூன்று குழந்தைகளும் மிகக் குறைந்த எடையில் இருந்தன. இதையடுத்து, மருத்துவர்களின் சிகிச்சைகளாலும், அறிவுறுத்தலாலும் தற்போது மூன்று குழந்தைகளும் ஆரோக்கியத்துடன் உள்ளன. தற்போது எனது குடும்பத்தார் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளனர். எனக்குப் பிறந்த மூன்று குழந்தைகளுக்கும் பிரத்தியங்கிரா, பிரகதி, பிரனிதா எனப் பெயர் சூட்டியுள்ளோம்” எனத் தெரிவித்தார்.
மூன்று குழந்தைகளை பெற்றெடுத்த தாய் இது குறித்து குழந்தைகள் நல மருத்துவர் கண்ணன் கூறுகையில், “இந்த மூன்று குழந்தைகளும் பிறக்கும்போது 1 கிலோ 200 கிராம், 1 கிலோ 600 கிராம், 1 கிலோ 900 கிராம் என்ற எடை கணக்கில் தான் பிறந்தது. சுமார் ஒரு மாத காலமாக மருத்துவமனையிலேயே தங்களது தொடர் கண்காணிப்பில் வைத்து தாய்ப்பால் மூலமாகவும், சில சிகிச்சைகள் மூலமாகவும் மூன்று குழந்தைகளையும் மிகவும் கவனமாக கையாண்டு வந்தோம். தற்போது மூன்று குழந்தைகளுமே நல்ல ஆரோக்கியத்துடன் 5 கிலோ அளவிற்கு எடை உயர்ந்துள்ளது.
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூன்று குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிறந்து ஆரோக்கியமாக இருப்பது இதுவே முதல் முறை. இதற்கு முன் 5 முறை ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்துள்ளன. ஆனால், ஏதாவது ஒரு காரணத்தால் ஒரு குழந்தையோ அல்லது இரண்டு குழந்தைகளோ இறப்பை சந்திக்கும். ஆனால், தங்களின் கடின முயற்சியால் பிறந்த மூன்று குழந்தைகளுமே ஆரோக்கியத்துடன் இருக்கின்றது.
கரோனா தொற்று காலத்தில் நாமக்கல் அரசு மருத்துவமனையில் கடந்த 8 மாதங்களில் சுமார் ஆயிரத்து 600 பிரசவங்கள் நடைபெற்றுள்ளது. இதில் 14 இரட்டைப் குழந்தை பிரசவங்களும் , 1 முப்பிரசவக் குழந்தைகளும் பிறந்துள்ளது. இதேபோல் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் கடந்த 8 மாதங்களில் சுமார் ஆயிரத்து 400 பிரசவங்கள் நடைபெற்றது. அதில், நான்கு இரட்டைப் பிரசவக் குழந்தைகள் பிறந்தது. இது கடந்தாண்டை காட்டிலும் 15 விழுக்காடு அதிக பிரசவம்” என்றார்.
சிறப்பு பிரிவு குறித்து பேசும் மருத்துவர் கண்ணன் நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை அரசு மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டாலும் அதிகளவு பிரசவங்களும் நடைபெற்றன. கரோனா காலத்தில் வழக்கத்தை விட அரசு மருத்துவமனைகளில் பிரசவஙகள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இறந்து பிறந்த குழந்தை: மருத்துவர்கள், செவிலியர்களின் அலட்சியம்தான் காரணமா?