நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்த கள்ளிப்பாளையத்தை சேர்ந்தவர் தனபால். இவருக்கும் மதுரையை சேர்ந்த சந்தியா(26) என்பவருக்கும் கடந்த 7-ஆம் தேதி திருமணம் ஆனது. திருமணத்தை மதுரையை சேர்ந்த புரோக்கர் பாலமுருகன் ஏற்பாடு செய்திருந்தார். திருமணத்திற்கு பெண் வீட்டார் சார்பில் பெண்ணின் அக்கா, மாமா என இருவர் மட்டுமே வந்திருந்தனர்.
அவர்களும் புரோக்கரும் திருமணம் முடிந்த கையோடு புரோக்கர் கமிஷன் ரூ 1.50 லட்சத்தை கையோடு வாங்கி சென்றனர். தனபாலும் திருமணம் முடிந்ததால் புது வாழ்க்கையை தொடங்கினார். இந்நிலையில் கடந்த 9-ஆம் தேதி தனபாலின் வீட்டிலிருந்து சந்தியா மாயமானார். அவரது செல்போன் எண்ணிற்கு அழைத்த தனபால், செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது கண்டு சந்தேகமடைந்தார்.
பின்னர், வீட்டிலிருந்த பீரோவை திறந்து பார்த்த போது அதிலிருந்த நகைகள் மற்றும் திருமண புடவைகள் ஆகியவை மாயமாகி இருந்தது. இதனையடுத்து சந்தியாவின் உறவினர்கள் மற்றும் புரோக்கர் பாலமுருகன் ஆகியோரை தொடர்பு கொண்டபோது அவர்களின் எண்ணும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து தனபால் பரமத்திவேலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கு திருமணத்திற்கு பெண் பார்த்த போது, மதுரையை சேர்ந்த புரோக்கர் தனலட்சுமி என்பவர் மூலம் மீண்டும் சந்தியாவின் புகைப்படம் வந்துள்ளது. இதனை அறிந்த தனபால் திட்டம் தீட்டி மோசடி கும்பலை வரவழைக்க முடிவு செய்தார். அதன்படி, புரோக்கர் தனலட்சுமியிடம் பேசி திருமணத்தை திருச்செங்கோட்டில் நடத்தலாம் என முடிவு செய்தனர்.