நாமக்கல் மாவட்டம் பொட்டிரெட்டிப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கடந்த வியாழன் அன்று கழிவறை சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் காயத்ரி, கனிஷ்கா ஆகிய மாணவிகள் சுவற்றிற்கு அடியில் சிக்கி படுகாயம் அடைந்தனர். காயத்ரி காலிலும், கனிஷ்கா தலையிலும் பலத்த காயம் அடைந்த நிலையில் இருவருக்கும் நாமக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மாணவி காயத்ரி உயர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தலையில் அடிபட்டு உயர் சிகிச்சை பெற்று வரும் மாணவி காயத்ரி அபாய கட்டத்திலேயே உள்ளதால் அம்மாணவிக்கு உயர் சிகிச்சை அளிக்க பெற்றோர், பொதுமக்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள், பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் பள்ளியின் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கல்வித் துறை, காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.
மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்ட மாவட்டக் கல்வி அலுவலர் உதயகுமார், பள்ளியின் தலைமை ஆசிரியை மணிமேகலை மாணவர்களின் பாதுகாப்பில் கவனக்குறைவாக செயல்பட்டதோடு, ஆபத்தான கழிவறை சுவர் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காதைதக் கண்டித்தும் கவனக் குறைவாக செயல்பட்டதாகவும் அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.