நாமக்கல்: முன்னாள் மின்துறை அமைச்சர் தங்கமணி, இன்று நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, “மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் முறையாக அறிவிக்காமல், மின்சாரக் கட்டண உயர்வை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார். ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்படும் வகையில் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
நிர்வாகத் திறமையின்மையால் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மின்சாரத்துறை என்பது சேவைத்துறை. அதில் நஷ்டம் ஏற்படுவது என்பது சாதாரண விஷயம். ஆனால், அமைச்சர் செந்தில் பாலாஜி, மின்சாரத்துறைக்கு வருமான நோக்கத்திற்காக கட்டணத்தை உயர்த்தியுள்ளார். கட்டண உயர்வுக்கு மத்திய அரசு மீது மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வீண் பழி சுமத்துகிறார்.
மின் கட்டண உயர்வால் மேற்கு மண்டலத்தில் உள்ள விசைத்தறி தொழில் உள்பட பல்வேறு தொழில்கள் பாதிக்கப்படும். எனவே, உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை அரசு திரும்பப் பெற வேண்டும். முதலமைச்சர் ஸ்டாலினிடம் நற்பெயர் வாங்குவதற்காக, அவசர கதியில் விவசாயிகளுக்கு 1 லட்சம் மின்சார இணைப்பு வழங்கப்பட்டது.