நாமக்கல் மாவட்டம் பரமத்தி அடுத்த சேற்றுக்கால் மாரியம்மன் கோயிலில் நள்ளிரவில் பணியிலிருந்த இரவு காவலாளி கணேசன் என்பவரை ஒரு அறையில் அடைத்துவிட்டு கோயிலின் பூட்டை உடைத்து 50 ஆயிரம் ரொக்கப்பணம், சாமியின் வெள்ளி கிரீடம், தாலிக் கொடி ஆகியவற்றை ஹெல்மெட் அணிந்த மூன்று அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துள்ளனர்.
ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் மூன்று இளைஞர்கள் பணத்தை பங்குபோட்டுக் கொண்டிருந்ததைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த சிலர் அவர்களிடம் நெருங்கியபோது, அங்கிருந்து தப்ப முயன்றுள்ளனர். இதன் பின் அந்த மூன்று இளைஞர்களையும் அப்பகுதி மக்கள் சுற்றிவளைத்து பிடித்து கை, கால்களை கட்டிப்போட்டு அடித்து உதைத்துள்ளனர்.
'எத்தனை சம்பவம் பண்ணி இருக்கோம் தெரியுமா' - பொதுமக்களுக்கு மிரட்டல் விடுத்த கொள்ளையர்கள்! - Namakkal theft news
நாமக்கல் அருகே கோயிலின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த மூன்று கொள்ளையர்களை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்தனர்.
பொதுமக்களின் அடி உதைக்குப் பொங்கிய அந்த இளைஞர்கள், "காவல் துறையினர் வரட்டும், எங்களை கைது செய்யட்டும், எங்களை கொன்று விடுங்கள், காவல் துறையினர் வந்ததுக்கு அப்புறம் தெரியும் நாங்கள் யார்ணு, நாங்கள் வெளியே வந்ததுக்கு அப்புறம் இந்த ஊர் எப்படி பதறும்ணு பாருங்க, மதுரைல எத்தனை தலையை கலட்டிருக்கோம் தெரியுமா. இப்போ கத்தி இல்லாம இருக்கோம், யூ-டியூப்ல என்னுடைய புகைப்படைத்தை போட்டு பாருங்க எத்தனை தலையை கலட்டிருக்கோம் என தெரியும்.
போலீஸ் வந்தாலும் கை, கால்களை தான் உடைக்க முடியும், தூக்கில் போடமுடியாது, முடிந்தால் கொள்ளுங்கள் பார்ப்போம்" என அங்கிருந்தவர்களை மிரட்டி உள்ளனர்.
இதன்பின் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரமத்தி காவல் துறையினர் மூன்று இளைஞர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் மூவரும் மதுரையைச் சேர்ந்த ராசு, முருக சூர்யா, கருப்பசாமி என்பதும், மூவரும் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு சிறைக்கு சென்றுள்ளனர் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும் மூன்று நபர்களிடம் காவல் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.