தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் தலைவராக இருந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதியன்று காலமானார். அவருடைய முதலாமாண்டு நினைவு நாளை அவருடைய கட்சி தொண்டர்கள் இந்த மாதம் அனுசரித்தனர்.
இந்நிலையில் நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ள குச்சிக்காடு எனும் கிராமத்தில் சுமார் 10 பேர் இணைந்து தங்களுடைய சொந்த நிலத்தில் கருணாநிதிக்கு கோயில் கட்டும் பணியைத் தொடங்கியுள்ளனர். கோயில் கட்டுவதற்காக அவர்கள் நேற்று பூமி பூஜை செய்தனர்.
கலைஞர் கருணாநிதிக்கு கோயில் கட்டுவதற்கான பூமி பூஜையில், கட்சி வேறுபாடுகளைக் கடந்து அனைத்து தரப்பு மக்களும் கலந்துகொண்டனர். மேலும் இந்த பூமி பூஜை செய்தவர்கள், அருந்ததியர் மக்களுக்கு மூன்று சதவிகித இடஒதுக்கீடு பெற்று தந்ததற்கு நன்றி தெரிவிக்கும் வண்ணமாக அவருக்கு ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கோயில் கட்டும் பணியை தொடங்கியுள்ளதாக தெரிவித்தனர்.
கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்த காலத்தில், அருந்ததியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது என்பதனால் அந்த சமூதாயத்தை சேர்ந்த மக்கள் இணைந்து இக்கோவிலை கட்டவுள்ளனர்.
கலைஞர் கருணாநிதிக்கு கோயில் கட்டுவதற்காக பூமி பூஜை செய்யப்பட்டது. பொதுவாக சினிமா பிரபலங்களுக்கு, ரசிகர்கள் கோயில் கட்டுவது வழக்கமான ஒன்று. ஆனால் அதற்கு ஒருபடி மேலே போய் அரசியல் கட்சி தலைவர் ஒருவருக்கு அவரது நினைவாக கட்சியின் தொண்டர்கள் கோவில் கட்ட திட்டமிட்டிருப்பது அனைவரின் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகளை வெகுஜன மக்களிடம் கொண்டு சேர்ந்த முக்கியமான தலைவர் கருணாநிதி என்பது குறிப்பிடத்தக்கது.