நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை அடுத்துள்ள எஸ்.உடுப்பம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு சரவணன் என்ற ஆசிரியர் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், கடந்த 10ஆம் தேதி அங்குள்ள பள்ளி குழந்தைகளுக்கு ஆசிரியர் சரவணன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறி அவரை பொதுமக்கள், பெற்றோர் சரமாரியாக தாக்கினர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து, ஆசிரியர் சரவணன் மீது பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு பின் அவர், விசாரணை வளையத்திற்குள் உள்ளார்.
இதனிடையே தற்போது மாவட்ட பள்ளிக்கல்வித்துறையினர் ஆசிரியர் சரவணனை பணியிட மாற்றம் செய்ய முடிவு செய்து புதுச்சத்திரம் அடுத்த கூத்தமூக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளனர். அதனைத்தொடர்ந்து ஆசிரியர் சரவணனுக்கு எதிர்ப்பு தெரிவித்து கூத்தமூக்கன்பட்டி பள்ளியில் படிக்கும் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி பெற்றோர்கள் பேசியபோது, ஆசிரியர் சரவணன் பாலியல் வழக்கில் சிக்கியுள்ளார். அவரை பணி நீக்கம் செய்யாமல் மீண்டும் தங்களது பகுதியில் உள்ள பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. இந்த முடிவை அரசு கைவிடவேண்டும். இல்லையென்றால் எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பமாட்டோம் என்றனர்.